Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

இந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடந்தது.இதில், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள், பேரூரில்அமைய உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் அங்குநேரில் சென்றும் ஆய்வு செய்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் தமிழகத்துக்கு 727.67 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரிகளில் தற்போது 7,288 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. சென்னையில் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 851 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது உள்ளநீர் இருப்பைக் கொண்டு, எந்த பிரச்சினையும் இன்றி டிசம்பர் வரை குடிநீர் விநியோகம் செய்யலாம்.

நெம்மேலியில் ஒரு நாளைக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் ரூ.1,259கோடியில் நடந்து வருகிறது. இத்திட்டம் 2023 ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

பேரூரில் ரூ.6,078 கோடியில் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 2025 டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும்.

சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக, கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடக்கின்றன.

தமிழகத்தில் விடுபட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் செப். 15-க்குள்நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவது குறித்தும் சட்டப்பேரவையில் முதல்வரே அறிவிப்பார். இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் வகையில் பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண் இயக்குநர் சி.விஜயராஜ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா, செயல் இயக்குநர் பி.ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x