Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டில் புதிய நடைமுறை : முடிவுகள் நாளை வெளியாகின்றன

பிளஸ் 2 மணவர்களுக்கான இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் புதிய நடைமுறையை தேர்வுத் துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில்70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் நாளை (ஜூலை 19)வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் குழப்பத்தை தவிர்க்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இதுவரை 80, 70 என்பதுபோல முழுமையாக வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் முந்தைய 10, பிளஸ் 1 வகுப்பு தேர்வுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

அத்தகைய கணக்கீட்டின்போது பெரும்பாலும் இறுதி மதிப்பெண்கள் 70.11 என்பதுபோல தசம எண்களுடன் சேர்ந்து வரும். மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பாதிப்பு அடைவதை தவிர்க்க மதிப்பெண் சான்றிதழில் தசம விகிதங்கள் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளன.

உதாரணமாக, பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஒரு மாணவரின் இறுதி மதிப்பெண் கூட்டுத்தொகை 78.29 என்று வந்தால் அது முழுமதிப்பெண்ணாக (79) மாற்றப்படாமல் 78.29 என்று தசம எண்ணாகவே மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படும். இந்த புதியநடைமுறை நடப்பு ஆண்டு அமலுக்கு வருகிறது. கட்ஆஃப் மதிப்பெண் கணக்கீட்டின்போது இதுபெரிதும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் கட்டணம் வசூலிப்பா?

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணமாகரூ.100 வசூலிக்கப்படுவதாக கூறி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்புஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளிக்கல்வி ஆணையர் தரப்பில், ‘‘கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

இந்த சுற்றறிக்கையை பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மாவட்ட வாரியாக அறிக்கைகளை பெற்று, அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வி ஆணையர் ஜூலை 27-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x