Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM

கரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் - நீட் தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடியை தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நேற்று காணொலி மூலம்நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்த கருத்தைதெரிவித்தார். மேலும் தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடிதடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர் பிரதமரை கேட்டுக் கொண்டார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகம், கேரளாஉள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் கடினமான பணியை, புதிதாக பொறுப்பேற்ற அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழகம்தான். எனது அரசு இந்த சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தமிழகத்துக்கான ஆக்சிஜன் மற்றும்ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியதற்கு மத்திய அரசுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். பிரதமரின் நேரடி தலையீட்டைக் கோரும் சில முக்கியமான விவகாரங்களை கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை தமிழக அரசு 6 சதவீதத்தில் இருந்து முழுமையாக தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்துக்கான ஒதுக்கீடு மிகவும்குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்புஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியுள்ளேன். இந்த முக்கியமான பிரச்சினையில், உங்கள் ஆதரவை நான் எதிர்நோக்குகிறேன்.

இரண்டு கோடி குடும்பங்களுக்கு, இரு தவணைகளில் ரூ.4 ஆயிரத்தை கரோனா நிவாரணத் தொகையாக கொடுத்துள்ளோம். மேலும், 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கியதொகுப்பையும் இந்த குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். மத்தியஅரசு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியது. இதேபோல், தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும்.

தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, கரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டிருந்தேன். அதைகனிவுடன் பரிசீலிக்கவும். மூன்றாம் அலை வரும் என கூறப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதனை எதிர்கொள்ள ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள சூழலில் நீட் போன்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளை நடத்துவது கரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கலாம். எனவே, பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இப்பெருந்தொற்றை கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். இதில் இருந்து மீள உங்களோடும், அனைத்து மாநிலங்களுடனும் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்த பின் சென்னை திரும்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் அறிவுறுத்தலின்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மத்திய கல்வித் துறை அமைச்சரை சந்தித்தோம். நீட் தேர்வில் இருந்துதமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கி சொல்லியிருக்கிறோம். சிறப்பு தொகுப்பாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தியிருக்கிறோம்.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

தேசிய சுகாதார குழுமத்துக்கு கரோனா 2-வது அலை செலவினம் மற்றும் கரோனா 3-வது அலைக்கு செய்ய வேண்டிய கட்டமைப்புக்கு ரூ.1,500 கோடி திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கப்பட்டது. இதில்,ரூ.800 கோடியை மத்திய சுகாதாரத் துறை விடுவித்துள்ளது. இதை செலவு செய்த பின்னர், மீண்டும் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்துதெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் கருத்து நீட் தேர்வு தேவையில்லை என்பதாகவே இருக்கிறது.குழு சமர்ப்பித்துள்ள 165 பக்கங்கள்கொண்ட அறிக்கை குறித்து மேல்நடவடிக்கைக்காக சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x