Published : 17 Jul 2021 03:13 AM
Last Updated : 17 Jul 2021 03:13 AM

புதுச்சேரி மாநிலத்தில் - குழந்தைகளுக்கு சிறப்புச் சிகிச்சை தர தயார் நிலையில் மருத்துவமனைகள் : ஆளுநர் தமிழிசை தகவல்

கரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதித்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிப் பிரிவுகள், மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவை மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 9 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனை சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தக்குழந்தைகளை சிறப்பு கவனத்துடன் கவனித்து வருகின்றனர். இதற்கிடையில், புதுச்சேரியில் தற்போது 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி துணை ஆளுநர் மாளிகை முன்பு நேற்று தொடங்கியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் கரோனாவின் தீவிரம் குறைந்து வருகின்ற சூழ்நிலையில், குழந்தைகள் அதிகம்பாதிக்கப்பட்டு இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது உண்மையல்ல. பொதுவாக மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு நோய்த் தொற்றுகள் அதிகம் வரும். ஒன்றிரண்டு அதிகமாக இருக்கலாம். இதை 3-வது அலையின் தொடக்கம் என்று கருத முடியாது. சுகாதாரத் துறையின் சீரிய சிகிச்சை முறையால் குழந்தைகள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்புகிறார்கள்.

குழந்தைகள் கரோனாவால் அதிகம் பாதித்துவிடக் கூடாது என்பதால் குழந்தைகளை பாதுகாப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை வெளியில் அதிகம் கூட்டிச் செல்வதையும் உறவினர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். விழிப்புணர்வோடு பெரியவர்கள் செயல்பட வேண்டும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிப் பிரிவுகள், மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவை மருத்துவமனையில் தயார்நிலையில் உள்ளன. குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

தற்போது மருத்துவமனைகளில் ரத்தம் அதிகம் தேவைப்படும். சூழல் உள்ளது என்பதால் அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x