Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

மத்திய அரசிடம் அதிமுக அரசு கடுமையாக போராடியது - நீட் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை திமுக உடனே நிறைவேற்ற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட்தேர்வு ரத்து’ என்று கூறியது.

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2010-ல் நீட் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2011-16 வரை தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றார். உச்ச நீதிமன்றம் 2016-ல் நீட் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும்என்று தீர்ப்பளித்தது.

அதிமுக அரசு 2017-ல் நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்குவிலக்களிக்க கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கவில்லை. மேலும், 2017-ல் நீட் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுதாக்கல் செய்து,இதை விசாரிக்க தனி நீதிபதிகள் குழுவை நியமிக்க பெறப்பட்ட ஆணையை அப்போது ரத்து செய்ததும் இப்போதைய முதல்வரின் கூட்டாளிகள்தான்.

மேலும் 2020-21ம் ஆண்டுக்கும் நிரந்தரமாகவும் விலக்கு கேட்டு மத்திய அரசிடம் அதிமுக அரசு கடுமையாக போராடியது. தற்போதைய திமுக அரசு நீதிபதி ராஜன் தலைமையில் நீட் தேர்வால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அறிய அமைக்கப்பட்ட குழு தொடர்பான வழக்கில், நீதிபதிகள் அளித்த 14 பக்க தீர்ப்பில், குழு அமைத்தது அரசின் கொள்கை முடிவு என்பதால், மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது.

இக்குழு நீட் தேர்வை ரத்து செய்ய அமைக்கப்பட்டிருப்பதாக அரசின் பிரமாணப்பத்திரத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம், அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்ற முதல்வர், தன் இயலாமையை மறைக்க என் மீது பழிசுமத்தியுள்ளார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்துவிடும் என்று தேர்வுக்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அவர்கள் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.

நீட் தேர்வை அதிமுக அரசு கடுமையாக எதிர்த்தபோதும், அரசு இருக்கும் வரை தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்ததுடன், மாவட்டம்தோறும் சிறந்த வல்லுநர்களை கொண்டு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தமிழகம் மட்டுமல்ல; நாடுமுழுவதும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகொண்டவர்கள் நாங்கள். இன்றைய திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x