Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

தேர்வை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது - ‘நீட்’ பாதிப்புக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்போம் : முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது. நீட் தேர்வால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடதெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழக மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே எதிர்த்து வருகிறோம். திமுக ஆட்சி அமைந்ததும், நீட் தேர்வு பாதிப்புகளை விசாரிக்க, முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து இக்குழுவினரிடம் கருத்துகள் குவிந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து, அதன்மூலமாக தமிழக அரசு எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு அடுத்தடுத்து மேற்கொள்ள உள்ளது.

இந்த நிலையில் பாஜக பொறுப்பாளர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு ரிட் மனுதாக்கல் செய்தார். ‘நீட் தேர்வை விலக்குவது சட்டரீதியாக இருக்குமானால் அதை பாஜக ஏற்கும்’ என்று சட்டப்பேரவையில் பாஜக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், அப்பட்டமான இரட்டை வேடமாக அதே பாஜகவின் பொறுப்பாளரால் இத்தகைய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாஜகவின் இரட்டை வேடம், அதிமுகவின் அடிமைச் சேவகம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, தனது தீர்ப்பின் மூலம் நெத்தியடி கொடுத்துள்ளது உயர் நீதிமன்றம்.

நீட் தேர்வுக்கு எதிரான நமதுபோராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும்.

மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இத்தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழக அரசுக்கு இத்தீர்ப்பு அளித்துள்ளது.

நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன்மூலமாக தமிழக அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன.

இந்த ஆண்டுக்கான தேர்வுதேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது. தமிழக அரசு, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருக்கும்இந்த நேரத்தில் நடக்கும் இந்தஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே. ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும்பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x