கடந்த 2020-21-ல் லோக்பால் அமைப்பிடம் - 4 எம்.பி.க்கள் உட்பட 110 பேர் மீது ஊழல் புகார்கள் :

கடந்த 2020-21-ல் லோக்பால் அமைப்பிடம் -  4 எம்.பி.க்கள் உட்பட 110 பேர் மீது ஊழல் புகார்கள் :
Updated on
1 min read

கடந்த 2020-21-ம் ஆண்டில் லோக்பால் அமைப்பிடம் 4 எம்.பி.க்கள் உள்பட 110 பேர் மீது ஊழல் புகார்கள் வந்துள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்காக லோக் ஆயுக்தா அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம் இதுவாகும்.

லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ இருக்க வேண்டும். லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம். அதில் 4 உறுப்பினர்கள் நீதித் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டில் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.சி. கோஷ் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து லோக்பால் அமைப்பிடம் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 2020-21-ம் ஆண்டில் 4 எம்.பி.க்கள் உள்பட 110 பேர் மீது புகார்கள் வந்தன. இது 2019-20-ம் ஆண்டில் 1,427 புகார்களை விட குறைவு ஆகும்.

இந்த ஆண்டில் 12 புகார்கள்

இதில் 8 பேர் குரூப் ஏ, பி வகையிலான அரசு அதிகாரிகள் என்பதும், 4 பேர் வாரியம், ஆணையம், நிறுவனம், சொசைட்டி போன்றவற்றின் தலைவர், உறுப்பினர், அதிகாரிகள், ஊழியர்கள் நிலையில் இருப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதில் 2 புகார்கள் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பின்னர் முடித்து வைக்கப்பட்டன. 3 புகார்கள் மீது ஆரம்ப கட்ட விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. மற்றொரு புகார், சிபிஐ-யின் ஒப்புதலுக்காக காத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஊழலுக்கு எதிராகப் போராடும் செயற்பாட்டாளர் அஜய் தூபே கூறும்போது, “புகார்கள் மீதான விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பதை லோக்பால் அமைப்பு தெரியப்படுத்த வேண்டும். 2 ஆண்டுகளாக லோக்பால் அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும் லோக்பால் அமைப்பில் 2 உறுப்பினர்கள் பதவியிடம் காலியாகவுள்ளது. அதை நிரப்ப உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in