Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

ஆம்பூர் வனப்பகுதி நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீர் : குவியும் சுற்றுலா பயணிகள்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித் துக்கொட்டுகிறது. இதைக்காண சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் மிதமான மற்றும் கனமழை பெய்தது. கடந்த 8-ம் தேதி இரவு விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பாலாற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியிலும், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியொட்டியுள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்கு உட்பட்ட மத்தூர்கொல்லை என்ற பகுதிக்கு மேற்குப்பகுதியில் உள்ள நந்திசுனை என்ற இடத்தில் ‘தேவுடு கானாறு’ ஓடுகிறது. ஆந்திர மாநிலத்தின் கவுண்டன்யா வன விலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளிலும், ஆம்பூர் வனச்சரகக் காப்புக்காடுகளிலும் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ‘தேவுடு கானாற்று’ பகுதியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேவுடு கானாற்றுப்பகுதியை தொடர்ந்து, நந்திசுனை நீர்வீழ்ச்சி, புளியன்சுனை நீர்வீழ்ச்சி, குரங்குப்பாறை நீர்வீழ்ச்சி, குதிரைப் பாறை நீர்வீழ்ச்சி, வனத்துறை சார்பில் கட்டப்பட்ட தடுப்பணை நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதை அறிந்த ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, நாட்றாம்பள்ளி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்கள் அங்கு அதிக அளவில் படை யெடுத்து வருகின்றனர்.

தற்போது, புளியன்சுனை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவில் வருவதால் அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க இளைஞர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக ஆர்வம் காட்டி வரு கின்றனர். மூலிகை மணத்தோடு, தூய்மையான தண்ணீர் புளியன்சுனை நீர்வீழ்ச்சியில் கொட்டுவதால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளும், இளைஞர்களும் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மற்ற நீர்வீழ்ச்சிகளில் பாது காப்பு கெடுபிடி இல்லாததால் அங்கு இளைஞர்கள் ஆனந்தமாக குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருந்தாலும், தற்போது கரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நீர்வீழ்ச்சிப்பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x