Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

குடும்பநல திட்டத்தில் தமிழகம் முன்னிலை : நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் விஷ்ணுதொடங்கிவைத்தார். திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற செவிலியர்களுக்கு ஆட்சியர் பரிசளித்து பேசியதாவது:

உலக மக்கள்தொகை 1987-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் 500 கோடியை தாண்டிவிட்டது என்ற அபாயத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஐக்கிய நாடு சபை அந்நாளை உலக மக்கள் தொகை தினம் என்று அறிவித்தது. ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மக்கள்தொகை 138கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில்தற்போது உத்தேசமான மக்கள்தொகை 8.22 கோடியாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உத்தேச மக்கள்தொகை 20,58,372 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப நல திட்டம் கடந்த 65 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தாய்சேய் நலத்தை மேம்படுத்தி அதன் மூலம் பிறப்பு விகிதத்தையும், குழந்தை இறப்பு விகிதத்தையும், மகப்பேறு தாய் இறப்பு விகிதத்தையும் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இரண்டு குழந்தைகளோடு நிரந்தர குடும்ப நல முறை ஏற்காததம்பதியர் உயர் வரிசை பிறப்புபகுதியில் வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மகாதேவி, வள்ளியூர், களக்காடு, பாப்பாக்குடி வட்டாரங் களில் உயர்வரிசை பிறப்புமாவட்ட சராசரி அளவை விட அதிகமாக உள்ளது. எனவே, இந்தஆறு வட்டாரங்களில் சிறப்பு கவனம்செலுத்தப்பட்டு வருகிறது. குடும்பநல திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

மக்கள்தொகை கட்டுப்பாடு

தமிழ்நாட்டில் 2018-ல் பிறப்பு விகிதம் 14.7 ஆகவும்,இறப்பு விகிதம் 6.5 ஆகவும், சிசு மரண விகிதம் 15 ஆகவும், உயர்வரிசை பிறப்பு விகிதம் 7.2 ஆகவும் இருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2020-ல் பிறப்பு விகிதம் 11.5 ஆகவும், இறப்பு விகிதம் 4.9 ஆகவும், சிசு மரண விகிதம் 7.8 ஆகவும், உயர் வரிசை பிறப்பு விகிதம் 8.2 ஆகவும் உள்ளது.

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம் மற்றும் சிறந்த சமுதாய சூழ்நிலை ஆகியவை அனைத்து மக்களுக்கும் சரியான விகிதத்தில் கிடைக்க வழிபிறக்கும்.

அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் தற்காலிக குடும்பநல முறைகளான காப்பர்-டி, வாய்வழி மாத்திரை, சாயா எனும் வாராந்திர வாய்வழி மாத்திரை, 3 மாதத்துக்கு ஒருமுறை பெண்கள் போட்டுக்கொள்ளும் அந்தாரா எனும் கருத்தடை ஊசி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவரும் சிறுகுடும்ப நெறியை பின்பற்றி வளம் பெற வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x