Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

அதிமுக அரசு அறிவித்த வேளாண் கடன் தள்ளுபடி திட்டம் - அடமான நகைகள் திரும்ப கிடைக்குமா? : தமிழ் விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் கோரிக்கை

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

விவசாயிகளுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்து, நகைகளை திரும்ப வழங்கவேண்டும் என, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக பல்வேறுதரப்பினர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு அமைப்பினர் மனு கொடுக்கமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி கொடுத்த மனு:

கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுவழங்கப்பட்டது. ஆறு மாதங்களாகியும் விவசாயிகளுக்கு நகைகளை திருப்பி வழங்கவில்லை. தற்போது விவசாயத்துக்கு கடன்பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நகைகளை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரங்கப்பாதை

கயத்தாறு அருகே கோடங்கால் கிராம மக்கள் மதிமுக பேரூர் செயலாளர் பி.ரெங்கசாமி, ஊர்த் தலைவர் ராமசுப்பு, செயலாளர் நல்லையா ஆகியோர் கொடுத்த மனு:

கோடங்கால்- கடம்பூர் சாலையில் 2-வது ரயில் பாதை அமைக்கும் பணியில் புதிதாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்தசுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர்தேங்கி போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடங்கால் கிராம மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் அவசியத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயம் அடைந்த 7 பேர், தங்கள் குடும்பத்தினருடன் அளித்த மனு:

துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிய பட்டியலில் எங்கள் பெயர்விடுபட்டுள்ளது. எங்கள் நிலையைகருத்தில் கொண்டு எங்களுக்கு ஏதாவது ஒரு அரசு பணி வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.ஜெகஜீவன் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி- திருநெல்வேலி தேசியநெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை. வாகைகுளம் சுங்கச்சாவடியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்திவிட்டு சுங்கச்சாவடியை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன் அளித்த மனு:

திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில், கீழநாலு மூலைக்கிணறு கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் அளித்த மனு:

கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஜூலை 31-ம் தேதியை கடந்து ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசுஅனுமதிக்க கூடாது. ஆலையைநிரந்தரமாக அகற்ற சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x