Published : 12 Jul 2021 03:13 AM
Last Updated : 12 Jul 2021 03:13 AM

புதுவையில் வரும் 16-ம் தேதியிலிருந்து9 முதல் 12-ம் வகுப்பு, கல்லூரி திறப்பு : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 16-ம் தேதியிலிருந்து 9 முதல் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதையடுத்து பல மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளில் இன்று முதல் தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கவுள்ளன.

புதுச்சேரியில் கரோனாவால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் மருத்துவக் கல்லூரியை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதுது. அதேபோல் பள்ளிகள் திறப்பு மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கவும் ஆலோசனை நடத்தியது.

தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் சூழ்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ளோருக்கும், கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று பெற்றோர் உட்பட பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் வரும் 16-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து பல மாதங்களாக கரோனாவால் மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகளை தூய்மை செய்யும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது.

அத்துடன் பள்ளி, கல்லூரிகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள், திறப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகியவை கல்வி மற்றும் உயர்க்கல்வித்துறைகள் தரப்பில் வெளியாகவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x