Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

சில துறைகளிலேயே நிதி ஆதாரம் இருப்பதால் - நம் வளத்தை கொண்டு நம்மை வளப்படுத்தும் வழிமுறையை காட்டுங்கள் : பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நமது வளங்களை கொண்டு நம்மை வளப்படுத்துவதற்கான வழிமுறைகளை காட்டுங்கள் என்று பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு கூட்டம்’ நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த்சுப்பிரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்கள், சமூக நீதி மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கான ஆலோசனைகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமமானவாய்ப்புரிமைக்கு ஆலோசனைகள், மாநில பொருளாதார வளர்ச்சி,வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்திமேம்பாடு தொடர்பான ஆலோசனைகள், மாநிலத்தின் மொத்தமான நிதிநிலையை பாதுகாக்க ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக்கூடிய தீர்வுகளுக்கான வலுவான ஆலோசனை மையமாகநீங்கள் திகழ வேண்டும். கரோனாவுக்கு முற்றுப்புள்ளிவைத்த பின் நேரில் சந்திப்போம்.

இந்த குழு தொடர்பான பாராட்டுக்கள் அனைத்தையும் மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும், தனிநபர் வருமானமும் அதிகரிக்க வேண்டும். அரசு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனில் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2 லட்சம் கோடி கடனில் உள்ளன. நிதி ஆதாரம் என்பது விரல்விட்டு எண்ணத்தக்க சில துறைகளில் மட்டுமே உள்ளது. ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மாநில உரிமைகளை பறித்துவிட்டதால், வரி வசூலை நம்ப முடியாது.

நமது வளங்களை கொண்டு நம்மை வளப்படுத்துவதற்கான வழிமுறைகளை காட்டுங்கள். தமிழகத்தில் இயற்கை வளம் உள்ளது. சீரான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மனிதவளமும் உள்ளது. சமூக பொறுப்புணர்வு உள்ளது. வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி, சமூகவளர்ச்சியாகவும் இருக்க வேண் டும்.

தமிழகத்தை தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்றவேண்டும். உலகத்துக்கு மனிதவளத்தை தரும் மாநிலமாக மாறவேண்டும். அனைத்து மாநிலங்களும் தமிழகத்தை உதாரணமாக கொண்டு திட்டமிடும் சூழலை உருவாக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும். எத்தகைய மாற்றத்துக்கும் தயாராக தமிழக அரசு உள்ளது.

தமிழகத்தின் ஒவ்வொரு மனிதரும் மகிழும் வகையில் இது எமது அரசு என்று சொல்லி அனைவரும் பெருமைப்படும் வகையில் இந்தஅரசு இருக்க வேண்டும் என்று நான்ஆசைப்படுகிறேன். அதற்கான கருவிகளில் நீங்களும் இடம் பெறவேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x