Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

யூரோ கால்பந்து தொடர் : அரை இறுதியில் நுழைந்தது இங்கிலாந்து :

யூரோ கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் உக்ரைன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.

இத்தாலியின் ரோம் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் உதவியுடன் பந்தை பெற்ற ஹாரி கேன் பாக்ஸ் பகுதியின் மையப்பகுதியில் இருந்து கோல் அடிக்க இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 46-வது நிமிடத்தில் ஃப்ரீகிக் வாய்ப்பில் லூக் ஷா அடித்த பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் நின்ற ஹாரி மாகுவேர் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணித்தார்.

அடுத்த 4-வது நிமிடத்தில் லூக் ஷாவின் கிராஸை பெற்ற ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணியானது 3-0 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தால் முழுமையாக ஒருதரப்பு ஆட்டமாகவே மாறிய இந்த போட்டியில் 63-வது நிமிடத்தில் மேசன் மவுண்ட் கார்னரில் இருந்து அடித்த பந்தை பாக்ஸ் பகுதியில் மையப்பகுதியில் நின்ற ஜோர்டான் ஹெண்டர்சன் தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ளிவிட்டார். முடிவில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வரும் 8-ம் தேதி லண்டனின் வெம்பிலி மைதானத்தில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டென்மார்க்கை எதிர்கொள்கிறது. டென்மார்க் அணி தனது கால் இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x