Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM

ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டதால் - உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு : உயர் நீதிமன்றம் உத்தரவு

உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடுவழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்காமங்கலத்தைச் சேர்ந்த ராஜகோபால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவியை பிரசவத்துக்காக 25.6.2012-ல் ராஜாக்காமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தேன். மறுநாள் காலை பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பின் அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டது. உடனடியாக எனது மனைவியை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். அங்கு ஆம்புலன்ஸ் இல்லை. அரை மணி நேர தாமதத்துக்கு பிறகே ஆம்புலன்ஸ் வந்தது.

ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் என் மனைவி இறந்துவிட்டார். பிரசவத்துக்கு பிந்தைய ரத்த கசிவு மற்றும் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் என் மனைவி இறந்துள்ளார். எனவே, எனது மனைவி இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்திருந்து மனுதாரரின் மனைவி உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பார். ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.

ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியம். இதுபோன்ற சூழலில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருந்தபோது அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு மனுதாரரின் மனைவி இறந்துள்ளார். எனவே, மனுதாரருக்கு சுகாதாரத் துறை 8 வாரத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x