Published : 02 Jul 2021 03:12 AM
Last Updated : 02 Jul 2021 03:12 AM

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு : ரூ.850.50-க்கு விற்பனை

சமையல் காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.25 உயர்ந்து, ரூ.850.50-க்கு விற்பனை செய்யப் படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யில் ஏற்படும் மாற்றம், அந்நியச் செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை

தமிழகத்தில் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப் பட்டுள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு அறிவிக்கப் பட்டுள்ள இந்த விலை உயர்வு, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.825.50-ல் இருந்து ரூ.850.50 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.834.50, கொல்கத்தாவில் ரூ.835.50 என்ற அளவில் விலை அதிகரித்துள்ளது.

வணிக ரீதியான காஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 உயர்ந்து, ரூ.1,687.50-க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x