Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM

செய்யாறு, அனக்காவூர் பகுதிகளில் பதுக்கிய 711 மதுபாட்டில்கள் பறிமுதல் :

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் செய்யாறு நகரம் வைத்தியர் வீதியில் வசிக்கும் குமார் மனைவி அமுல்(40) என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் செய்யாறு காவல் துறையினர் நடத்திய சோதனையில், அமுல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 608 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அமுலுவை கைது செய்தனர்.

இதேபோல், அனக்காவூர் அடுத்த புரிசை கிராமம் பஜனை கோயில் வீதியில் வசிக்கும் ஆறுமுகம்(43) என்பவர் வீட்டில் நடத்திய சோதனையில் 17 மதுபாட்டில்களும், அனப்புத்தூர் கிராமம் அண்ணா நகரில் வசிக்கும் ராஜா மனைவி சரளா(44) என்பவரது வீட்டில் 86 மதுபாட்டில்களும் கைப்பற்றப் பட்டன. இது குறித்து அனக்காவூர் காவல்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் மற்றும் சரளா ஆகியோரை கைது செய்தனர். மூன்று வழக்குகளிலும் மொத்தம் 711 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் உமராபாத் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அதேபகுதியைச் சேர்ந்த குமரன் (30) என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குமரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா பகுதியில் கிராமிய காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சாராயத்தை விற்பனைக்காக கொண்டு வந்த அதேபகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (43) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, வாணியம்பாடி அடுத்த காமராஜபுரம் பகுதியில் நகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைவான இடத்தில் வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராமு(39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 29 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x