Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM

காஷ்மீரில் மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய இளம்பெண் வீடு திரும்பினார் :

காஷ்மீரில் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு சீக்கிய இளம்பெண்களில் ஒருவர் நேற்று வீடு திரும்பினார்.

காஷ்மீரில் சமீபகாலமாக மதமாற்றம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்து மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த இளம்பெண்களை குறிவைத்து, லவ் ஜிகாத் மூலமாக அவர்கள் வேறு மதத்திற்கு மாற்றப்படுவதாக பரவலாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இதுபோன்ற சூழலில், காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு சீக்கிய இளம்பெண்களை, சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த நபர்கள் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்களை உடனடியாக கண்டுபிடித்து தரும்படியும், பெண்களை கடத்திச் சென்று மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரியும் சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் காஷ்மீர் முழுவதும் போராட்டம் வெடிக்கும் எனவும் அவை எச்சரித்திருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு இளம்பெண்களில் ஒருவர் நேற்று வீடு திரும்பினார். அடுத்த சில மணிநேரங்களிலேயே அந்தப் பெண்ணை ஸ்ரீநகரைச் சேர்ந்த சீக்கிய இளைஞருக்கு அவரது உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர். பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்கு புதுமணத் தம்பதியர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தற்போது டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டியின் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு இளம்பெண்ணை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லவ் ஜிகாத் சட்டம் வேண்டும்

இதனிடையே, ஹரியாணா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள லவ் ஜிகாத் சட்டத்தை காஷ்மீரிலும் அமல்படுத்த வேண்டும் என சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கு அகால் தத் (உலக சீக்கியர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு) தலைவர் கியானி ஹர்ப்ரீத் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், “காஷ்மீர் பள்ளத்தாக்கில் சீக்கிய இளம்பெண்களை லவ் ஜிகாத் என்ற பெயரில் மதமாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க லவ் ஜிகாத் தடுப்புச் சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x