Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

ஒருங்கிணைந்த பராமரிப்பு பணி நிறைவு - தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது : அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

தமிழகம் முழுவதும் நடந்து வந்த ஒருங்கிணைந்த மின்பராமரிப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இனிமேல் மின்தடை இருக்காது என்றுமின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில், சென்னை மண்டலத்தில் மின் விநியோகம், பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இதில்மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்பகிர்மான இயக்குநர் செந்தில்வேல் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய தாவது:

கடந்த ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகளால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மின்வாரிய நிர்வாகத்தை மீட்க, முதல்வர் பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்கி வருகிறார். மின்வாரியப் பணிகள், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் குறித்துவிவாதிக்க தமிழகம் முழுவதும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு புதிய மின்நிலையம்கூட செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்தது உள்ளிட்ட காரணங்களால் மின்வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மின்மிகை மாநிலம் என கூறி வந்தனர். ஆனால், கடந்தஅதிமுக ஆட்சியில் 4.23 லட்சம் விவசாய மின் இணைப்புகள் நிலுவையில் இருந்தன. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 2.04 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2.08 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் ரூ.1.59 லட்சம் கோடி கடனுக்கு 9 முதல் 13 சதவீதம் வரை வட்டி செலுத்தப்படுகிறது. வங்கியாளர்களிடம் பேசி ரூ.2 ஆயிரம் கோடி வட்டியை மிச்சப்படுத்தி உள்ளோம்.

தமிழகம் முழுவதும் நடந்து வந்த பராமரிப்பு பணி முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது. வரும்காலங்களில் இனி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

மின்தடை ஏற்படுவதாக பொத்தாம் பொதுவாக புகார் தெரிவிக்காமல், எந்த பகுதி, மின்இணைப்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் தெரிவித்தால், உடனடியாகசரிசெய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், பிரிவு அலுவலகங்களைச் சேர்ந்த500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x