Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM

மூன்றாவது அலை வந்தாலும் சமாளிக்க முடியும் - தமிழகத்தில் டெல்டா பிளஸ் வகை கரோனாவை தடுக்க நடவடிக்கை : சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சைதாப்பேட்டையில் நடந்ததடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உடன் இருந்தார். பின்னர், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு, தி.நகரில் உள்ள அவரது சிலைஅருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் குணமடைந்துவிட்டனர். இதுபற்றி பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. மூன்றாவது அலையாக உருவெடுக்க வாய்ப்பிருப்பதால் டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

14 இடங்களில்...

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் 14 இடங்களில் டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியும் பகுப்பாய்வு மையங்கள் உள்ளன. அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. டெல்டா பிளஸ் வைரஸை கண்டறிய மாதிரிகள் பெங்களூருஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக மாநில அரசு சார்பில் சென்னையில் ரூ.2.5 கோடியில் டெல்டா பிளஸ் ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் குறையும்.

இரண்டாவது அலையின்போது ஏற்பாடு செய்யப்பட்ட படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகள் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். இதனால் 6 மாதங்களுக்கு பின்னர் மூன்றாவது அலை வந்தாலும் சமாளிக்க முடியும். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் கரோனாவுக்கு பிந்தைய கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனை அடுத்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

பொதுவான நோய்களுக்கு சிகிச்சை

இதேபோல், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும். கரோனாதொற்று குறைந்து வருவதால் சர்க்கரை, டயாலிசிஸ், ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பொதுவானநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x