Published : 25 Jun 2021 03:11 AM
Last Updated : 25 Jun 2021 03:11 AM

‘சென்ட்ரல் விஸ்டா’ பணியில் முன்னேற்றம்: மத்திய நகர்ப்புற விவகார துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

'சென்ட்ரல் விஸ்டா' திட்டப் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களில் ஒன்று.

புதுடெல்லி

சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணியில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய முக்கோண வடிவ கட்டிடம், பிரதமர் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு இல்லங்கள், பொதுவான மத்திய தலைமைச் செயலகம், குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. தூர ராஜபாதையை மறுசீரமைப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்ட்ரல் விஸ்டா அவென்யூ மற்றும் புதிய நாடாளுமன்றப் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் சிலவற்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட அவர், “நமது தொழிலாளர்களின் உழைப்பும் விடாமுயற்சியும் வருங்கால தலைமுறைக்கான கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு வடிவம் தருகிறது. பணிகள் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகிறது. விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரியமும் நவீனமும் கலந்த சென்ட்ரல் விஸ்டா அவென்யூவின் புதிய தோற்றம் நகரின் இதயப் பகுதியை மாற்றி அமைக்க உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் 'சென்ட்ரல் விஸ்டா' பணிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அமைச்சர் தனது பதிவில், “இதன் கட்டிடக்கலை பாரம்பரியம் எதிர்க்கட்சியினரின் ஐஸ்கிரீம் மாலைப் பொழுதுகளை இன்னும் சிறப்பானதாக ஆக்கும்” என்று கூறியுள்ளார்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.862 கோடி செலவிலும் சென்ட்ரல் விஸ்டா அவென்யூ 477 கோடி செலவிலும் மேற்கொள்ளப்படுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x