Published : 25 Jun 2021 03:11 AM
Last Updated : 25 Jun 2021 03:11 AM

கரோனாவுக்கு பிந்தைய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்கள் - திண்டிவனம், செய்யாறில் தொழிற்சாலைகள் : கோயில்கள் சீரமைப்புக்கு ரூ.100 கோடி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கரோனாவுக்கு பிந்தைய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள் ளார். 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் செய்யாறு, திண்டிவனத்தில் பெரிய தொழிற் சாலைகள் அமைக்கப்படும், கோயில்கள் சீரமைப்புக்கு முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். 22, 23 தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது:

தமிழகத்தில் 1967-ல் திமுக ஆட்சி அமைந்ததும், ‘நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் இந்த ஆட்சி’ என்றார் அண்ணா. அதேவழியில், எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த அரசின் கொள்கைகளை, தமிழகம் எட்ட வேண்டிய இலக்கை, எமது தொலைநோக்குப் பார்வையைத்தான் ஆளுநர் தமது உரையில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். கடந்த 2 நாட்களாக நடந்த விவாதத்தில் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் உரையாற்றியுள்ளனர். அனைவரது கருத்துகளையும், இந்த அரசுக்கு சொல்லும் ஆரோக்கியமான ஆலோசனைகளாகவே எடுத்துக் கொள் கிறேன். ஏனென்றால் நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் கொள்கை வாரிசு.

உறுப்பினர்கள் பேசும்போது முன் வைத்த கோரிக்கைகள், தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும். ஆளுநர் உரை என்பது, அரசின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில், அரசின் 5 ஆண்டுகளுக் கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான். இது ஒரு ‘ட்ரெய்லர்’ மாதிரி. இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ள உள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ள இருக்கும் இடர்ப்பாடுகள், அவற்றை களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்களை சந்திப்பதற்கான சாதுரியங்கள் என அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் விரிவாக இடம்பெறும். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டு வோம். அதில் ஒரு துளிகூட சந்தேகம் வேண்டாம்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா நிவாரணமாக 2 கோடியே 11 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரத்து 393 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா சலுகை என்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் மூலம் 75 ஆயிரத்து 546 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் 20 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 330 பேருக்கு ரூ.77 லட்சத்து 53 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. 47 நாட்களில் 65 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்த மே 7-ம் தேதி 26 ஆயிரமாக இருந்த கரோனா பாதிப்பு, 36 ஆயிரமாக உயர்ந்து இப்போது 7 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. படுக்கை கள் இல்லை, ஆக்சிஜன் வசதி இல்லை என்ற சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ‘இல்லை, இல்லை’ என்ற சொல்லை இல்லாமல் ஆக்கியிருக்கிறோம். புதிய படுக்கைகள், ஆக்சிஜன், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை உருவாக்கியுள்ளோம். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 89 ஆயிரத்து 618 படுக்கைகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

மோசமான சூழலை கட்டுப்படுத்தியது திமுக அரசின் மகத்தான சாதனை. கரோனா மூன்றாவது அலை வரக்கூடாது. வந்தா லும், அதை எதிர்கொள்ளும் சக்தி இன் றைய அரசுக்கு இருக்கிறது. அனைவரும் சேர்ந்து செயல்பட்டு, அனைத்து தரப் பினரின் ஆலோசனையையும் பெற்று கரோனாவுக்கு முழுமையான முற்றுப் புள்ளியை இந்த அரசு வைக்கும்.

ஆளுநரின் உரை மூலமாக ஏராள மான கொள்கை அறிவிப்புகளை செய்திருக்கிறோம். இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று கூறுவோர்க்கு இதுதான் என்னுடைய பதில். இதுவரை 50 நாட்களுக்குள் செய்திருக்கக்கூடிய மிக முக்கியமான சாதனைகளில் சிலவற்றைத்தான் இங்கே சுட்டிக்காட்டி இருக்கிறேன். இவற்றை எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் மக்களுக்கு நிச்சயமாக நன்கு தெரியும்.

‘சமூகநீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை’ ஆகிய நான்கின் பலத்தில்தான் திமுகவும் நிற்கிறது. இந்த அரசும் நிற்கிறது. ஆளுநர் உரையைப் படிப்பவர் கண்களுக்கு சமூகநீதியும், சுயமரியாதையும், தமிழுக் கும், தமிழர்களுக்கும் நாங்கள் செய்ய இருக்கும் நன்மைகளும், மாநில உரிமை களுக்கான எங்களது முழக்கங்களும் நிச்சயம் தெரியும்.

தமிழகத்தின் கருவூலம் எப்படி திசைமாறி, உருமாறி, தேய்ந்து, ஓய்ந்து கிடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சீர்படுத்துவதே எங்களு டைய முதல் வேலை. அதற்காகத்தான் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்திருக்கிறோம்.

இன்றைய நிதி நிலைமையில், ஏழை எளிய, நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதால், அவர்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளித்து வருகிறோம். இருப்பதை எப்படிப் பெருக்குவது, பெருக்கியதை எப்படிப் பகிர்ந்தளிப்பது, மாநிலத்தின் வளத்தையும், நலத்தையும் எப்படிப் பேணுவது, உயர்த்துவது என்பதை ஆழ்ந்து ஆராய்ந்து, ‘சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல்’ செயலாற்றுவோம் என்ற என்னுடைய உறுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று குறைந்துள்ள போதும் அதனால் பாதிக்கப்பட்டு குண மடைந்தவர்களுக்கு சில பிரச்சினைகள் வருவதாக பலரும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். தேவைப்படும் உயர்சிகிச்சை மருத் துவர்களோடு இந்த மையங்கள் செயல் படும்.

செய்யாறில் 12 ஆயிரம் பேருக்கும், திண்டிவனத்தில் 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பெரும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உடனடியாக சீரமைக்கப்படும். புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க, திருக்குளங்களைச் சீர மைத்திட, திருத்தேர்களை புதுப்பித்து திருவிழாக்கள் நடத்த முதல்கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ.100 கோடியில் தேவையான பணிகள் 100 கோயில்களில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வழக்குகள் வாபஸ்

தமிழகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்கள் தொடர்பாக மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர், ‘‘கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டம், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, சேலம் எட்டுவழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x