Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் 10 மாதங்களுக்குப் பின் மீண்டும் பறக்கிறது

புதுடெல்லி

உலகின் மிக நீளமான மற்றும் கனமான சரக்கு விமானமான ‘ஆன்டோனோவ் ஏஎன்-225’ 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பறக்கத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் நாட்டின் 'ஆன்டோனோவ் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த பிரம்மாண்ட விமானம் 84 மீட்டர் நீளமும் 18.2 மீட்டர் உயரமும் கொண்டது. இறக்கைகள் இருபுறமும் சேர்த்து 88.4 மீட்டர் நீளத்துக்கு விரிவடைந்து காணப்படும். பிரம்மாண்ட உபகரணங்கள், ராணுவத்தளவாடங்கள் மற்றும் தொழிற்சாலை கருவிகளை கொண்டு செல்ல இந்த விமானம் ஏற்றது. 1980-களில் அப்போதைய சோவியத் யூனியனில் இந்த விமானம் வடி வமைக்கப்பட்டு, கட்டப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம்தேதி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் வந்த பிறகு தீவிர பராமரிப்புக்காக இதன் சேவையை விமான நிறுவனம் நிறுத்தியது.

இந்நிலையில் இந்த ஏஎன்-225விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கீவ் நகரின் கோஸ்டோமெல் ஆன்டோனோவ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மேற்கு ஆசியா நோக்கிப் பறந்தது என விமான செய்தி வலைத் தளமான ‘சிம்பிள் பிளையிங்’ தெரிவித்துள்ளது.

காபூலின் ஹமீத் சர்சாய் விமான நிலையம் நோக்கி இந்த விமானம் செல்வதாகவும் மறுநாள் காலை அங்கு தரையிறங்கும் என்றும் அத்தளம் மேலும் கூறியது.

ஏஎன்-225 விமானம் மற்றும் இதை விட சற்று சிறிய ஏஎன்-124 விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு இயக்குவதன் மூலம் ஆன்டோனோவ் விமான நிறுவனம் நிலையான வணிகத்தை கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும்நேட்டோ ராணுவப் படைகளுக்காக இந்த விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு இயக்கப்படுகின்றன.

ஏஎன்-225 விமானம், தற்போதைய பராமரிப்பு பணிக்கு முன், தேவைப்படும் இடங்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லவும் பயன் படுத்தப்பட்டது.

கடந்த 2020 ஏப்ரலில் 100 கியூபிக் மீட்டர் மருத்துவப் பொருட்களுடன் இந்த விமானம் சீனாவில் இருந்து போலந்து நாட்டுக்கு பறந்தது. விமானம் மூலம் இதுவரை கொண்டு செல்லப்பட்ட மிக அதிக அளவு சரக்கு இதுவாகும் என ‘சிம்பிள் பிளையிங்’ தெரிவித்தது. ஆனால் ஒரு வாரத்துக்கு பிறகு சீனாவில் இருந்து பிரான்ஸுக்கு இதைவிட அதிகமான பொருட்களுடன் பறந்து தனது சாதனையை தானே முறியடித்தது.

இந்த விமானம் தரையிறங்கி யவுடன் அதில் இருந்த சரக்குகளை இறக்குவதற்கு விமான நிலைய ஊழியர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x