Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 50 நாட்களில் 28 முறை பெட்ரோல், டீசல்விலை உயர்ந்துள்ளது. நேற்று 25 முதல் 28 பைசா வரை உயர்ந்தது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் மும்பையில் ரூ.103.63க்கும், டெல்லியில் ரூ.97.50க்கும், கொல்கத்தாவில் ரூ.97.38க்கும், சென்னையில் ரூ.98.65க்கும் விற்பனையானது. ஒரு லிட்டர் டீசல் மும்பையில் ரூ.95.72க்கும், டெல்லியில் ரூ.88.23க்கும், கொல்கத்தாவில் ரூ.91.08க்கும், சென்னையில் ரூ.92.83க்கும் விற்பனையானது.

மேலும் மத்தியப் பிரதேசம்,ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா,ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர முந்தைய காங்கிரஸ் அரசும் ஒரு முக்கிய காரணம் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்தபேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியின்போது பெறப்பட்ட பல கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்கள் மீதான முதிர்வு தொகையைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு பாஜக அரசு மீது விழுந்துள்ளது. பாஜக அரசு அந்தக் கடனை வட்டியோடு சேர்த்து அடைக்க வேண்டியிருக்கிறது. எரிபொருள் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்தியாவுக்குத் தேவையான 80 சதவீத எரிபொருளை இறக்குமதி மூலமாகத்தான் பெற்று வருகிறோம். இதன் காரணமாகவும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தற்போதைய எரிபொருள் விலை உயர்வு மக்களுக்குப் பிரச்சினையாக இருப்பதை உணர முடிகிறது. அதேநேரம் கரோனா தடுப்பூசி திட்டங்களுக்காக அரசு ரூ.30 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.

இதுபோன்ற நெருக்கடியான சூழலில் மக்கள் நலத் திட்டங்களுக்காக நிதியை சேமிக்க வேண்டிய கட்டாயத்திலும் அரசு இருக்கிறது. எனவே எரிபொருள் விலையைக் குறைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து இம்மாதத் தொடக்கத்தில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்திய காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்ந்து,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது என்று விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின்  கங்காநகர் பகுதியில் நாட்டிலேயே மிக அதிகமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.67க்கும், டீசல் விலை ரூ.101.4க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x