Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

நெல்லை அருகே ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் - சிமென்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டு மீட்பு : 6 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகளை எஸ்பி மணிவண்ணன் பார்வையிட்டார். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே சிமென்ட்ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 2 பைப் வெடிகுண்டுகளை போலீஸார் மீட்டு செயலிழக்கச் செய்தனர். ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி தாழையூத்துசங்கர் நகரில் செயல்பட்டு வரும்சிமென்ட் ஆலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தற்போது குறைவான தொழிலாளர்களை வைத்து உற்பத்தி நடைபெறுகிறது.

ஆலையின் செக்யூரிட்டி அலுவலக தொலைபேசியில் நேற்று பேசிய மர்ம நபர், “சிமென்ட் ஆலை வளாகத்தில் 5 இடங்களில் பைப் வெடிகுண்டு வைத்துள்ளோம். ரூ.50 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துவிடுவோம்” என்று மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

போலீஸாருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. தாழையூத்து துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, காவல்ஆய்வாளர் பத்மநாப பிள்ளை மற்றும் வெடிகுண்டு பிரிவு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஆலை வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது 2 பைப் வெடி குண்டுகள் தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் உள்ள லிஃப்ட்கட்டுப்பாட்டு அறையில் கண்டெடுக்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அந்த வெடிகுண்டுகளை சுண்ணாம்பு குவாரியில் வைத்து போலீஸார் செயலிழக்க வைத்தனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறும்போது, “பட்டாசில் பயன்படுத்தக் கூடிய வெடி மருந்தை, இரும்பு குழாய்க்குள் வைத்து, பைப் வெடிகுண்டு தயாரித்துள்ளனர். அவை முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டன” என்றார். இதுதொடர்பாக, 6 பேரை பிடித்து தாழையூத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x