Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

வாயலூர் தடுப்பணை மூலம் பாலாற்றங்கரை கிராமங்களில் மீண்டும் கரும்பு சாகுபடி :

பாலாற்றங்கரையோர கிராமமாக விளங்கும் வாயலூரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கல்பாக்கம்

வாயலூர் தடுப்பணை மூலம் பாலாற்றுப் படுகையில் தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ள வாயலூர் விவசாயிகள், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கரும்பு சாகுபடியைத் தொடங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் பாலாற்று முகத்துவாரம் அமைந்துள்ளது. இதன்மூலம், கடல்நீர் ஆற்றுப்படுகையில் ஊடுருவியதால் கரையோர கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், கரையோரத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் உப்புநீர் சுரப்பு ஏற்பட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், பாசனத் தேவைக்கும் தண்ணீர் இல்லாததால் கரும்பு உள்ளிட்ட முக்கிய பயிர்களை சாகுபடி செய்வதை விவசாயிகள் கைவிட்டனர்.

இதனால், குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்கவும், விளை நிலங்களை பாதுகாப்பதற்காகவும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில், கடந்த 2019-ம் ஆண்டு கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் நிதி உதவியில் ரூ.32.50 கோடி செலவில் 5 உயரத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டது. இதன்மூலம், பாலாற்றுப் படுகையில் சுமார் 5 கிமீ தொலைவுக்கு தண்ணீர் தேங்கி நின்று கடல்போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், பாலாற்றுத் தடுப்பணை மூலம் கரையோர கிராமங்களில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளதால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கான தண்ணீர் தேவை பூர்த்தியாகியுள்ளது. இதையடுத்து, கரையோர கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதில், தண்ணீர் பற்றாக்குறையால் வாயலூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்டிருந்த கரும்பு சாகுபடியை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

மேலும், கரும்பு பயிருக்கான தண்ணீர் தேவை முழு அளவில் கிடைப்பதால் பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் கரும்பு சாகுபடி செய்ய ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து, கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது: பாலாற்றுப் படுகை முற்றிலும் வறண்டதால் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால், அதிக தண்ணீர் தேவைப்படும் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது.

அதனால், பெரும்பாலான கரையோர கிராமங்களில் கரும்பு பயிரிடுவதை, விவசாயிகள் முற்றிலும் தவிர்த்தனர். தற்போது, தடுப்பணை மூலம் பாலாற்றில் தண்ணீர் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால், விளை நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்சுரப்பு அதிகரித்துள்ளது. அதனால், வாயலூரில் பல ஆண்டுகளுக்கு பிறகு கரும்பு சாகுபடி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x