Last Updated : 24 Jun, 2021 05:53 AM

 

Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்க

ணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி நெல்லை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்த நெல்லை விற்க ஏதுவாக மாவட்டத்தில் 193 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு நாள்தோறும் 900 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலிருந்து சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யாமல் இருப்பதால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் சேதமாகும் நிலை ஏற்படும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர் அருகே உள்ள காட்டூர், வாண்டையார் இருப்பு, சடையார்கோவில், நெய்வாசல், பொன்னாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் தலா 10 ஆயிரம் மூட்டைகளுக்கு குறையாமல் தேங்கியுள்ளன. புதிதாக கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை வைக்க போதிய இடமில்லை. இதன் காரணமாக இந்த இடங்களில் நெல் கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. கொள்முதல் நிலையங்களில் உள்ள மூட்டைகளை இயக்கம் செய்து வெளிமாவட்டங்களுக்கு அனுப்பாமல், சேமிப்பு கிடங்கில் உள்ள மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முன்னுரிமை வழங்குகின்றனர்.

புதிதாக கொள்முதல் செய்யும் நெல்மூட்டைகளை வைக்க போதிய இடமில்லாததால் நெல் கொள்முதல் செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். தற்போது மழையும் பெய்து வருகிறது. நிர்வாகம் மூட்டைகளை பாதுகாக்க படுதாக்களைக்கூட வழங்கவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய கூடுதலான லாரிகளை பயன்படுத்தினால் இந்த நிலை ஏற்படாது’’ என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் மேலாளார் நத்தர்ஷா கூறும்போது, ‘‘கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமிக்க காசவளநாடுகோவிலூரில் 15 ஆயிரம் டன் இருப்பு வைக்கும் அளவுக்கு புதிதாக திறந்தவெளி சேமிப்பு கிடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சேமிப்பு கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் நாள்தோறும் 1,500 டன் அளவுக்கு அரைவைக்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வர அதிகளவிலான லாரிகளை இயக்கவும், போதியளவு படுதாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x