Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் - சிறு துறைமுகங்கள் சட்ட மசோதாவை எதிர்க்க வேண்டும் : கடலோர மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் சிறு துறைமுகங்கள் சட்ட மசோதாவுக்கு கடலோர மாநிலங்கள் கடும் எதிர்ப்புதெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.

இதுதொடர்பாக குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா,மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டமசோதா குறித்துதங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ‘இந்தியதுறைமுக மசோதா 2021' என்ற புதியசட்ட மசோதாவை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க ஜூன் 24-ம் தேதி மாநில முதல்வர்களின் கூட்டத்துக்கு கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் (எம்.எஸ்.டி.சி) அழைப்பு விடுத்துள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இந்திய துறைமுகங்கள் சட்டம் 1908-ன்படி, துறைமுகங்கள் தொடர்பான திட்டமிடல், மேம்பாடு,ஒழுங்குபடுத்துதல், சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலங்களுக்கு இருந்து வரும் பல அதிகாரங்களை எம்.எஸ்.டி.சி-க்கு மாற்றும் நோக்கில் புதியசட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.டி.சி ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே இதுவரை உள்ளது.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு இப்போதுள்ள சட்டம்வழிவகுக்கிறது என்பதை கடலோரமாநில முதல்வர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய சட்டமசோதா சிறு துறைமுகங்களை நிர்வகிப்பதில் நீண்டகால பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தமசோதா சட்டமானால் சிறு துறைமுகங்களில் மாநில அரசுகள் எந்தமுக்கியப் பங்கையும் ஆற்ற முடியாது. மாநில சுயாட்சியை குறைக்கும் இந்த சட்ட மசோதாவுக்கான எதிர்ப்பை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.

மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு அனைத்துக் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுக்க கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த மசோதாவுக்கு எம்.எஸ்.டி.சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x