Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி - பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் : சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், நடிகர் விவேக் உள்ளிட்டோருக்கு பேவைரயில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதினாறாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் அன்று பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்துபேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத் தொடரை வரும் 24-ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இரங்கல் தீர்மானம்

அதன்படி, பேரவை 2-வது நாளாகநேற்று காலை 10 மணிக்கு கூடியது. முதல் நிகழ்வாக முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ-க்கள் மு.பாண்டுரங்கன், அ.முஹமத்ஜான், அ.பாப்பாசுந்தரம், செ.அரங்கநாயகம், தி.செ.விஜயன், வி.எஸ்.ராஜி, கி.ரா.ராஜேந்திரன், ச.சகாதேவன், எஸ்.சுலோசனா, கே.பி.ராஜு, கி.ராமச்சந்திரன், எம்.அன்பழகன், ஜெ.பன்னீர்செல்வம் ஆகிய 13 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்புகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

அதைத் தொடர்ந்து, எழுத்தாளர் கி.ராஜநாராயணன், திரைப்பட நடிகர் விவேக், சுதந்திரப் போராட்ட வீரர் கி.துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை பேரவைத் தலைவர் வாசித்தார். பின்னர், மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஆளுநர் உரை மீது விவாதம்

அதன்பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் ஆ.தமிழரசி பேசும்போது, ‘‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பேரவையில் இப்போதே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

உழவர்கள் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என திமுக பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. அந்த வகையில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ளஉழவர்களின் உணர்வுகளையும் விருப்பத்தையும் முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இந்த அவையில் ஒருமனதாக தீர்மானம்நிறைவேற்ற அரசு தெளிவாக முடிவெடுத்துள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், அவையின் முதல் கூட்டத்தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதானவிவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது. அதனால், வரவுள்ள பட்ஜெட் கூட்டத்தின்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் எதிர்ப்பை பதிவு செய்து,அவற்றை திரும்பப் பெற வலியுறுத்திதீர்மானம் நிறைவேற்றுவோம். அதேபோல், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமும்நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து,அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தையும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x