Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

அரசின் முயற்சிகளால் சிமென்ட் விலை குறைப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

அரசின் முயற்சிகளால் சிமென்ட்,கம்பி விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதம்:

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): முதியோர் உதவித் தொகையை ரூ.1,500 ஆக உயர்த்துவது, குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 நிதியுதவி குறித்த விவரங்கள் ஆளுநர் உரையில் இல்லை.கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் அளிக்கப்படாததால், விவசாயிகளால் பயிர்க்கடன் பெற முடியாத நிலை உள்ளது. சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு:கடந்த மார்ச் மாதமே சிமென்ட்விலை ரூ.420 ஆக உயர்ந்தது. சமீபத்தில் ரூ.490 ஆக உயர்ந்துவிட்டது. சிமென்ட் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி, அதன்மூலம் தற்போது விலை ரூ.460 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக சிமென்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கம்பி விலையும் ரூ.1,100 வரை குறைந்துள்ளது.

அமைச்சர் எ.வ.வேலு: திட்டங்களை செயல்படுத்த நிதி வேண்டும்.நிதிநிலையை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அடுத்த மாதம் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம். இன்னும் 5 ஆண்டுகள் உள்ளன. நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களுக்கான உத்தரவுகளையும் முதல்வர் பிறப்பிப்பார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி: கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சம் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில், இதுவரை 12.30 லட்சம் பேருக்கு, அதாவது 76 சதவீத விவசாயிகளுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதில் எந்த தடையும் இல்லை.

ஓஎன்ஜிசி விண்ணப்பம் நிராகரிப்பு

மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசும்போது, ‘‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் வடதெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. கடலூர், அரியலூரில் ஆய்வு நடத்த சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளதை அரசு தடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது, ‘‘திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய எண்ணெய் வளம் குறித்த ஆய்வு மற்றும் எண்ணெய் எடுக்க தோண்டுவதற்கும், உற்பத்திக்கும் தேவையான எந்த அனுமதியையும் ஓஎன்ஜிசிக்கு வழங்காது என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த மாவட்டங்களுக்கு வெளியே எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்களால் சுற்றுச்சூழலுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய வல்லுநர் குழு விரைவில் அமைக்கப்படும். தற்போது ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அரியலூரில் 10, கடலூரில் 5 எண்ணெய்க் கிணறுகளுக்கு ஆய்வுநடத்த சுற்றுச்சூழல் அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 21-ம் தேதி நிராகரிக்கப்பட்டன. மீத்தேன், ஷேல்கேஸ் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x