Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

தருமபுரி அரசு மருத்துவமனையில் - கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு; தம்பதி உட்பட 4 பேர் கைது :

தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 2 நாட்களில் மீட்ட போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் நாச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி. இவர்மனைவி மாலினி (20). நிறைமாதகர்ப்பிணியாக இருந்த இவர்கடந்த 18-ம் தேதி தருமபுரி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

19-ம் தேதி அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. மாலினிதொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் 20-ம் தேதி காலை கழிப்பறைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மாயமாகி இருந்தது.

தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் ஆய்வு செய்ததுடன், கடத்தப்பட்ட குழந்தையை மீட்க தருமபுரி டிஎஸ்பி அண்ணாதுரை, தருமபுரி நகரக் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்தார். இந்த தனிப்படை போலீஸார் விசாரணையை வேகப்படுத்தினர்.

அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு சிசிடிவி கேமரா பதிவில், முகக் கவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. காவல்துறைக்கு வழக்கமாக தகவல் தரும் ஒருவர் மூலம் கிடைத்த விவரங்களும் போலீஸாரின் விசாரணைக்கு மிக உதவியாக அமைந்தது.

இந்நிலையில், நேற்று குழந்தை மீட்கப்பட்டதுடன், குழந்தையை கடத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி அடுத்த பிடமனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாட்ஷா (24). இவர் மனைவி தன்ஜியா (20). இந்த தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மணமான நிலையில், தன்ஜியா சில முறை கருவுற்றுள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் கரு கலைந்துள்ளது.

எனவே, குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தன்ஜியா தன் கணவருடன் இணைந்து திட்டமிட்டு அரசு மருத்துவமனையில் நோட்டம் பார்த்து, மாலினியின் குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையை இண்டூரில் உள்ள, தன்ஜியாவின் தாய் ரேஷ்மா(41) வீட்டில் வைத்து பராமரித்துள்ளனர். இதற்கு, தன்ஜியாவின் பாட்டிபேகம் (60) என்பவரும் துணையாக இருந்துள்ளார். எனவே, இவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸாரால் மீட்கப்பட்ட குழந்தை நேற்று மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கலைச்செல்வன் முன்னிலையில் தருமபுரி நகரக் காவல் நிலையத்தில், குழந்தையின் தந்தை அருள்மணி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் நடந்து 2 நாட்களில், கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டதால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம், கடத்தியவர்கள் தொடர்பாக வேறு பின்னணி உள்ளதா என்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x