Last Updated : 23 Jun, 2021 03:13 AM

 

Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

குமரியில் தூர்வாரப்படாததால் - புதர்மண்டிக் கிடக்கும் 1,000-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் : தண்ணீர் சேமிக்க முடியாததால் விவசாயம் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூர்வாரப்படாததால் 1,000-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன. இவற்றில் தண்ணீர் சேமிக்க முடியாததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்ஆதாரப் பிரிவு கட்டுப்பாட்டில் 2,040 பாசன குளங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், வாழை, தென்னை மற்றும் பிற பயிர்கள் பயிராகின்றன. இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடைகாலத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால், மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பின. அதேநேரம், கடந்த இரு ஆண்டுகளாக நீர்நிலைகள் எதுவும் தூர்வாரப்படாததால் குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் புதர்மண்டிக் காணப்படுகின்றன.

தற்போது, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீர், பாசனக் கால்வாய்களில் விநியோகம் செய்யப்பட்டாலும், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் புதர்மண்டிக் கிடப்பதால் கடைமடைப் பகுதியை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கண்டன்விளை, கல்படி, இரணியல், வில்லுக்குறி, கொட்டாரம், கருங்கல், தோவாளை உட்பட மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குளங்கள் அடையாளமே தெரியாதவாறு புதர்மண்டிக் காட்சியளிக்கின்றன. இவற்றை, பொதுப்பணித்துறையினர் தூர்வாராததால், 20 அடி ஆழம் வரை கொள்ளளவு கொண்ட குளங்கள், 5 அடிக்கு கூட தண்ணீரை தேக்க முடியாத நிலையில் பலனற்று காணப்படுகின்றன. கோரை புற்களும், ஆகாயத் தாமரையும், பிற நீர்த்தாவரங்களும் நிறைந்துள்ள குளங்களில் தேங்கிய பாசன நீரை ஒரு மாதம் கூட பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இதனால், குளங்களை நம்பியுள்ள வாழை, தென்னை, நெல் போன்ற பயிர்களுக்கு, மழைக்காலத்தை தவிர, பிற சமயங்களில் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, குமரி மாவட்டத்தில் இருக்கும் பாசன குளங்களைத் தூர்வாரி பாதுகாத்தால்தான், தற்போதுள்ள விவசாயப்பரப்பு நீடிக்கும். இல்லையெனில், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வேளாண் பரப்பு மூன்றில் ஒரு பங்கு குறையும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருப்பது விவசாயத்துக்கு பக்கபலமாக உள்ளது. இதில், 2,040 குளங்கள் பொதுப்பணித்துறை நீர்ஆதாரப் பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளன. குளங்களை ஆண்டுதோறும் கோடை காலத்தில் தூர்வாருவதால் இரட்டிப்பு பலன் ஏற்படும். குளத்தின் நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கும். கடந்த காலங்களில், குளத்தில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கிவந்தது. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் குளங்களில் இருந்து மண் எடுத்துக்கொள்வர். அரசுக்கும் தூர்வாரும் செலவு மிச்சமாகும்.

ஆனால், தற்போது மண் அள்ள அனுமதி இல்லாததாலும், கடந்த இரு ஆண்டுகளாக குளங்கள் தூர்வாரப்படாததாலும், 1,000-க்கும் மேற்பட்ட குளங்கள் புல், புதர்களால் நிரம்பி, அழியும் நிலையில் உள்ளன, என்றனர்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை நீர்ஆதாரப் பிரிவினர் கூறியதாவது:

கடந்த இரு கோடை காலத்திலுமே கரோனாவை விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், கால்வாய்கள், குளங்களை தூர்வார முடியாத சூழல் ஏற்பட்டது. இனி வரும் நாட்களில் பாசனக் குளங்களை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x