Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

ஆன்லைன் வகுப்பின்போது - ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும் : அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக் குழந்தைகளை பாலியல்வன்முறையில் இருந்து பாதுகாப்பது மற்றும் இணையவழி வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் குழந்தைகளை பாலியல்வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கும் பொருந் தும்.

பாதுகாப்பு ஆலோசனைக் குழு

மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் 2 பேர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் 2 பேர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர், தேவைக்கேற்ப பள்ளி சாராத வெளிநபர் ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, தங்களுக்கு வரும் புகார்களை உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க வசதியாக கட்டணமில்லா நேரடி தொலைபேசி (ஹாட்லைன்), பிரத்யேக மின்னஞ்சல் உருவாக்கப்படும்.

போக்சோ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறையால் விழிப்புணர்வு திட்டம் ஏற் படுத்தப்படும்.

ஆன்லைன் வகுப்புகள்

இணையவழி கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் கண்ணியமாக உடையணிய வேண்டும். இணையவழி நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதுடன் அவற்றை குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவினர் தொடர் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரம் என அனுசரித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x