Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது - அரசு பள்ளியில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை : வேளாண்மைக்கு தனி பட்ஜெட் ஆளுநர் உரையில் அறிவிப்புஜூலையில் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை

தமிழ் வழியில் மற்றும் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப் பில் முன்னுரிமை, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்பன உள்ளிட்ட பல்வேறு அறி விப்புகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றுள்ளன. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட முதல் வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிந்து அமைக்கப்பட்டுள்ள 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. புதிய பேரவையின் முதல் கூட்டம் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.

ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

சமூக நீதி, ஆண் - பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி, இட ஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு, கல்வி, சமூக சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற்றம் ஆகிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்த அரசு தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த அரசின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சட்டமும், திட்டமும் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்.

வாக்களித்தோர், வாக்களிக்காதோர் என்று எந்த பாரபட்சமும் இன்றி தமிழக மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு எப்போதும் செயல்படும். மாநிலங் களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதி யாக நிற்பதுடன், உரிமைகள் மீறப்பட் டால் அரசியலமைப்பின் துணை கொண்டு கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல் லும் கூட்டு முயற்சியாளர்களாக மத்திய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும். தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம்.

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதால் ஒதுக்கப் படும் தடுப்பூசிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். முதல்வரின் சிறப்பான முயற்சிகளால் இதுவரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.335.01 கோடி நிதியுதவி குவிந்துள்ளது. இதில் ரூ.141.10 கோடியில் உயிர்காக்கும் மருந்துகள், கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் வழங்க ரூ.50 கோடியும், கரோனா 3-வது அலை தொடர்பான முன்னேற்பாடுகளுக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.8,393 கோடி மதிப்பில் ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகை, 2 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.466 மதிப்பிலான 14 வகையான மளிகைப் பொருள் தொகுப்புகளை ரூ.977.11 கோடி யில் அரசு வழங்கியுள்ளது. மே, ஜூன் மாதங்களுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.687 .84 கோடி செலவு ஏற்படும். இந்த அரசு பதவியேற்றது முதல் இதுவரை ரூ.10,068 கோடியை வழங்கியுள்ளது.

கரோனாவின் 3-ம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், அதை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். அதற்கேற்ப மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் அலுவல் மொழி

தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க மத்திய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத் தும். தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக் கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து மத் திய அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழி இணை அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசை வலியுறுத்து வோம். சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தன் னாட்சி நிலையை பாதுகாக்கவும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். காவல்துறை - மக்கள் இடை யிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்த, காவல்துறையினருக்கு தேவையான பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படும். அரசின் வருவாய், செலவினங்களை பாதிக்கும் நிலுவையில் உள்ள அரசு வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண, புதிய மேலாண்மை அமைப்புகள், நடை முறைகள் உருவாக்கப்படும்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் இதுவரை 63,500 மனுக் களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எங்கும் எப்போதும் அரசு சேவைகளை பொதுமக் கள் இணைய வழி வாயிலாக உடனுக் குடன் பெற வழிவகை செய்யப்படும்.

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர் கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார் களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்புக்கு புத்துயிரும் உரிய அதிகார மும் வழங்கப்படும். ஊழல் தடுப்பு ஆணை யரகம் முடுக்கிவிடப்பட்டு, நிலுவையில் உள்ள புகார்கள் மீது விரைவாக விசா ரணை மேற்கெள்ளப்படும். பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொதுச் சேவைகளை முறைப்படுத்த ‘சேவைகள் உரிமைச் சட்டம்’ அறிமுகப்படுத்தப்படும்.

பொருளாதார ஆலோசனை

தமிழக பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற் கொள்ளும். வளர்ச்சி இலக்குகளை எட்டு வதற்கான பாதையை வகுத்து தமிழக அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க, ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்று அமைக் கப்படுகிறது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் எஸ்.நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப் பினர்களாக இருப்பர். இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை அரசு உறுதி செய்யும்.

மாநிலத்தின் கடன் சுமையை குறைக் கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் அரசு முழுக்கவனம் செலுத்தும். முதல் கட்டமாக, தமிழக நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்.

ஆண்டுதோறும் வேளாண்மைக் கென்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழு வதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை களை பாதுகாக்க, அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகேதாட்டு திட் டத்தை நிராகரிக்கவும், முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த தேவையான அனுமதியை வழங்கும்படியும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரை களைப் பெற்று, தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கவில்லை. கரோனா தீவிரம் குறைந்த வுடன் தேர்தல் நடத்தப்படும். தமிழக மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்கள், அரசுப் பள்ளிகளில் பயின் றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன் னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும். இதற்கு மாறாக கடந்த காலங் களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், ரத்து செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங் களின் பணி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

இவ்வாறு உரையில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையின் தமிழாக்க உரையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து, பேரவை யின் நேற்றைய அலுவல்கள் முடிந்தன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை வரும் 24-ம் தேதி வரை நடத்த பேரவை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x