Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

கோயில் நிதி, நிலம், சொத்துகள் பாதுகாக்கப்படும்; விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் குடும்ப அட்டை - கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மீட்க சிறப்பு திட்டங்கள் : ஆளுநர் உரையில் அறிவிப்பு

சென்னை

கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கோயில் நிதி, நிலங்கள், சொத்துகள் பாதுகாக்கப்படும். மாவட்டம்தோறும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பரவல் காலத்தில் மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசின் முதன்மைப் பணியாகும். வேலைவாய்ப்புகள், சுய வேலைவாய்ப்புகளை உயர்த்தும் நோக்கத்தில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக பல்வேறு அரசுத்துறைகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும். கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களை விரைவாக மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறு கடன் பெற்றவர்கள், கடனை திரும்பச் செலுத்த விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு முதல்வர் எடுத்துச் சென்றுள்ளார். கரோனா காலத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்பதற்கான திட்டங்களை வகுக்க தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித் துறைவல்லுநர்கள், அரசு அலுவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளில் இருந்த தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகமும் கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்த அமைப்புகளின் நிதிநிலை, நிர்வாக கட்டமைப்பு குறித்துவிரிவாக ஆய்வு செய்யப்படும்.

தமிழகத்தின் சுற்றுலா திறனை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த ஆண்டில்ஒரு பெருந்திட்டம் வெளியிடப்படும். பழங்காலக் கோட்டைகள், அரண்மனைகள் புதுப்பிக்கப்பட்டு பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.

கோயில்களின் நிதி, நிலங்கள், சொத்துகள் பாதுகாக்கப்படும். பக்தர்களுக்கான வசதிகள், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்தவும், பிற ஆலோசனைகளை வழங்கவும் மாநில அளவில் உயர்நிலை குழு மீண்டும் அமைக்கப்படும்.

மகளிர் விடுதிகள்

மாவட்டம்தோறும் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்படும்.

தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான வரம்புகளை நீக்கவும், அவை நீக்கப்படும் வரைவருமான வரம்பை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

அரசுப் பணிகளில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்.

சச்சார் குழு பரிந்துரை அடிப்படையில் சிறுபான்மையினருக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். சட்ட நடவடிக்கைகள் மூலம்வக்ஃபு வாரிய நிலங்கள் பாதுகாக்கப்படும்.

அரசு அலுவலர்கள், ஒய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்படும்.

ஆவின் பால் சில்லறை விற்பனைவிலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளதால் தினசரி பால் விற்பனை 1.50 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் சீரமைக்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் மதுரையில் ரூ.70 கோடியில் உலகத் தரத்தில் நவீன பொது நூலகம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்.

ஊரக வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், தெரு விளக்கு, சாலை வசதி,நீர்நிலைகளை மறுசெறிவூட்டல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்இணைப்பு வழங்குவது இந்தஅரசின் தலையாய முன்னுரிமையாக இருக்கும். ஏழை, எளியோருக்கான வீடுகளின் கட்டுமானப் பணிகளை முடிப்பதில் அரசு கவனம் செலுத்தும். தகுதி வாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்கப்படும். இவ்வாறு்அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x