Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

எந்த சூழ்நிலையிலும் - இனிமேல் பின்வாங்க மாட்டேன் : தொண்டர்களிடம் சசிகலா பேச்சு

சென்னை

இனி நிச்சயமாக எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டேன் என்று தொண்டர்களிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகளுடன் உரையாடுவது போன்ற ஆடியோக்களை நாள்தோறும் சசிகலா வெளியிட்டு வருகிறார். இதுவரை 70-க்கும் அதிகமான ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில், ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்றும் ‘கட்சியை நிச்சயம் கைப்பற்றுவேன்’ என்றும் தொண்டர்களிடம் கூறி வருகிறார்.

இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த14-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாவட்ட அளவில் சசிகலாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். குறிப்பாக, சசிகலாவை கடுமையாக விமர்சித்து சேலம்அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த ராஜ்குமார், சிவகங்கை சரவணன், செங்கல்பட்டு சிரஞ்சீவி, திருத்துறைப்பூண்டி இளவரசன், வாசுதேவநல்லூர் மாரியப்பன் ஆகியோரிடம் சசிகலா நேற்று பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

தற்போது வீர வசனம் பேசுபவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்று நன்றாகவே தெரியும். அவர்களை பற்றியெல்லாம் நான்கவலைப்படுவது இல்லை. தொண்டர்கள் என்னுடன் இருந்தால் போதும். தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்றனர். என்னால் வெற்றிக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதால் அரசியலில் இருந்து விலகினேன். இனி நிச்சயம் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்கு வாக்களித்த தொண்டர்களை தற்போதைய தலைமை இழந்துவிட்டது. பணம் கொடுத்து தொண்டர்களை சரிக்கட்ட முடியாது.

இவ்வாறு சசிகலா கூறினார்.

இதற்கிடையில், அதிமுகவுக்கு தலைமை ஏற்க வரவேண்டும் என்று சசிகலாவுக்கு ஆதரவாக சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அதிமுக தலைமை நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x