Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு :

ஆம்பூர்: கணவருடன் ஏற்பட்ட தகராறில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவல் துறையினர் மீட்டு குடும்பத் தாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் மேகராஜ் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் நோக்கிச்செல்லும் ரயில் மிதமான வேகத்தில் ரயில் நிலையம் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அதேநேரத்தில் ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரயிலை நோக்கி நடந்துச்சென்றார்.

இதை கவனித்த ரயில்வே பாதுகாப்புப்படையினர் தண்டவாளத்தில் குதித்து ஓடிச்சென்று அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். பிறகு, ரயில் நிலையம் அழைத்து விசாரணை நடத்தியதில் அவர் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த ராஜி(38) என்பவரின் மனைவி சந்திரமதி (33) என்பதும், இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருப்பதும், கணவர்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த சந்திரமதி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, துத்திப்பட்டுக்கு சென்ற ரயில்வே பாதுகாப்புப்படையினர் அங்கிருந்த ராஜி மற்றும் குடும்பத்தாரை ஆம்பூர் ரயில் நிலையம் அழைத்து வந்து அறிவுரை வழங்கி சந்திரமதியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x