Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

தமிழகம் முழுவதும் உள்ள 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் சொத்துகளை - ‘ட்ரோன்’ உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணி விரைவில் முடிவடையும் : உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை அறிக்கை தாக்கல்

சென்னை

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்சொத்துகளை ‘ட்ரோன்’ கேமரா மூலமாக புவிசார்ந்த தகவல் அடிப்படையில் கண்டறிந்து துல்லியமாக அளவிடும் பணி விரைவில் முடிவடையும் என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை அறிக்கை அளித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் கோயில் வழிபாட்டாளர்கள் சங்கச் செயலாளர் ராதாராஜன், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தையும், தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களின் தனிப்பட்ட இணையதளங்களையும் முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த், ‘‘தமிழகம் முழுவதும் உள்ளகோயில்கள், அவற்றின் சொத்துகள்குறி்த்த விவரங்கள், அந்த சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா, வாடகை அடிப்படையில் விடப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு அறநிலையத் துறைஅதிகாரிகளுக்கு அந்தந்த மாவட்டஆட்சியர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி கடந்த ஜனவரி முதல் தொடர்ச்சியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிகாரி நியமனம்

தமிழகம் முழுவதும் உள்ள 44ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோயில் சொத்துகளைக் கண்டறிவது மற்றும் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்தில் ஜெயபாரதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கரோனா பரவல் காரணமாக நில அளவையர்கள் மற்றும்விஏஓ-கள் அப்பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதால் கோயில் சொத்துகளை ஆய்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில் சொத்துகளை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ‘ட்ரோன்’ கேமரா மூலமாக முப்பரிமாண அடிப்படையில் புகைப்படங்கள் எடுத்து, புவி சார்ந்ததகவல் அடிப்படையில் கண்டறிந்து அளவிடும் பணி விரைவில் முடிவடையும்.

ஜிபிஎஸ், ஜிஐஎஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் கோயில் சொத்துகள் மற்றும் நிலங்களின் நீளம், அகலம், உயரம் மிக துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. கோயில் சொத்து விவரங்கள், வாடகை, குத்தகை விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி அனிதாசுமந்த், வழக்கு விசாரணையை ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x