Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

மேகேதாட்டு அணை விவகாரத்தில் - உச்ச நீதிமன்றத்தை அரசு நாட வேண்டும் : ராமதாஸ், திருமாவளவன், விஜயகாந்த் வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:

ராமதாஸ்: தமிழக எல்லையை ஒட்டிய மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தீர்ப்பு அளித்திருந்தது. அந்த தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்துக்கு ஏற்பட்டபின்னடைவு. எனவே முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவளவன்: மேகேதாட்டுவிவகாரத்தில் கர்நாடக அரசையே மத்திய அரசு ஆதரிக்கிறது. காவிரி பிரச்சினை என்பது ஏதோ டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை அல்ல. தமிழகத்தின் உயிர்நாடியான உரிமை பிரச்சினையாக மாற்றவேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இதை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை தமிழகத்துக்கு உள்ளது.எனவே, தமிழகத்தில் உள்ள அனைவரும் காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் மேகேதாட்டுவில் அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்.

விஜயகாந்த்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு 9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x