Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

‘நீட்’ தேர்வுக்கு முழு காரணம் திமுகதான் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

‘நீட்’ தேர்வுக்கு முழு காரணம்திமுகதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘நீட்’ தேர்வு மற்றும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகள், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாக, சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.

மருத்துவச் சேர்க்கைக்கு ‘நீட்’தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட 2010-ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக என்று அமைச்சர் தனது பேட்டியில் தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். 2006 முதல் 2011 வரை திமுகதான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. மத்தியிலும் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது. ‘நீட்’தேர்வு திமுக ஆட்சிக் காலத்தில்கொண்டுவரப்பட்டது என்பதற்குவேறு ஆதாரம் தேவையில்லை.

மத்திய அரசுக்கு அதரவு அளித்ததன் மூலம் அந்த அறிவிக்கைக்கும் மறைமுகமாக ஆதரவு அளித்துவிட்டு, இப்போது அதிமுகதான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. இதை கடுமையாக கண்டிக்கிறேன். ‘நீட்’ தேர்வுக்கு முழு மூலக் காரணம் திமுகதான்.

இந்த ஆண்டைப் பொருத்தவரை, கரோனா காரணமாக மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் பிளஸ் 2 தேர்வுகளே ரத்து செய்யப்பட்ட நிலையில், ‘நீட்’ தேர்வுநடக்க வாய்ப்பில்லை என மாணவர்கள் நினைத்திருந்தனர். இதுகுறித்து நான் அறிக்கை வெளியிட்டதையடுத்து, “இந்த நிமிடம் வரைநீட் தேர்வு உண்டு” என்று அரசின்சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது இவ்வாறு அறிவித்திருப்பது, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை எடுத்துக்காட்டுகிறது.

‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

‘நீட்’ தேர்வுக்கு வித்திட்டுவிட்டு, தற்போது பயிற்சி அளிப்பதை குறை கூறுவது எவ்விதத்தில் நியாயம்? நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதை அறிந்துதான், அதிமுக அரசு, மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இதன்மூலம் ஏழை, கிராமப்புற மாணவர்களை பாதுகாத்தது அதிமுக அரசுதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x