Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

திருவாரூரில் வணிக வளாக உரிமையாளர் கொலை; ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றபோது சம்பவம்: 4 கொள்ளையர்கள் கைது

திருவாரூர் அருகே உள்ள கூடூரைச் சேர்ந்தவர் தமிழரசன் (60). அங்கு அவருக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அந்த வளாகத்திலேயே தமிழரசனின் வீடும் உள்ளது. இந்த வணிகவளாகத்தில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏடிஎம் மையத்தில் இருந்து சத்தம் வந்ததால், தமிழரசன் வெளியே வந்து பார்த்தார். அப்போது, வெல்டிங் வைக்க பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர், கடப்பாறை உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை 4 பேர் உடைத்து, கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களை தமிழரசன் தடுக்க முயன்றார். அப்போது 4 பேரும் தமிழரசனை தாக்கி, திருப்புளியால் குத்திக் கொலை செய்தனர். தமிழரசனின் அலறல் சத்தம் கேட்டுஅக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து வைத்துக் கொண்டு, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக, அங்கு விரைந்து சென்ற ரோந்து போலீஸார், இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்ற மற்ற 3 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர். இதில், இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கொள்ளையர்கள் 3 பேரும் காயமடைந்தனர்.

பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் லட்சுமாங்குடி அண்ணா காலனியைச் சேர்ந்த மதன் (22), வடபாதிமங்கலம் அருகேயுள்ள புள்ளமங்கலம் ஆகாஷ்(22), இளமங்கலம் பிரதாப்(24), ஊட்டியாணி விஜய் (20) ஆகியோர் என்பதும், குறுக்கு வழியில் பணக்காரர்களாகும் ஆசையில் அவர்கள் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, திருவாரூர் தாலுகா போலீஸார் கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, காயமடைந்த 3 பேரையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழரசனின் உடல் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொள்ளை சம்பவம் நிகழ்ந்த இடத்தின் எதிரேயுள்ள வெல்டிங் பட்டறையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஸ் சிலிண்டர் ஒன்று காணாமல் போனதாக, அதன் உரிமையாளர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த காஸ் சிலிண்டரைப் பயன்படுத்தித்தான் இந்தக் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x