Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் அறிவிப்பு - மேகேதாட்டு திட்டத்தை கைவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானமேகேதாட்டு அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிடவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகேதாட்டு அணை கட்டப்படும்’ என கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒருதலைபட்சமாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

இத்திட்டம் தமிழக விவசாயிகளின் நலனுக்கு விரோதமானதுஎன்றும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவை குறைத்துவிடும் என்று கூறி, தமிழக அரசு மிகக்கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிரதமரிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தீர்மானத்தை கடந்த 2015 மார்ச் 28-ம் தேதி நேரடியாக வழங்கியும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த புதிய அணை கட்டுவது தொடர்பாக, தமிழக அரசு தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரடியாகசந்தித்தபோது, ‘மேகேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது’ என வலியுறுத்தியுள்ளேன். இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாதன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இரு மாநில நல்லுறவுக்கு எவ்விதத்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதுடன், தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும்.

ஆகவே, தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கும், உச்ச நீதிமன்றத்தின் காவிரிஇறுதி தீர்ப்புக்கும் எதிரான மேகேதாட்டு அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் தமிழகத்தின் சார்பில் எனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா,தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இரு மாநில நல்லுறவுக்குஉகந்ததல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x