Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

கருணாநிதி காலந்தொட்டு தொடரும் உறவு என நெகிழ்ச்சி - சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் சந்திப்பு : 2 நாள் டெல்லி பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதல்வர்

டெல்லிக்கு இரண்டு நாள் பயணம் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கருணாநிதி காலந்தொட்டே தொடரும் உறவு இது. நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்’ என பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவரை திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுகஅலுவலகத்தின் கட்டுமானப் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், தமிழ்நாடு இல்லத்துக்கு சென்ற முதல்வர், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக நலன் சார்ந்த 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார். பிரதமருடனான சந்திப்பு, மகிழ்ச்சியான, மனநிறைவைத் தரக்கூடியதாக இருந்தது என முதல்வர் தெரிவித்தார்.

அன்றிரவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். முதல்வருடன் அவரது மனைவி துர்காஸ்டாலினும் சென்றிருந்தார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். அப்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு சோனியாவும், ராகுலும் வாழ்த்து தெரிவித்தனர். ‘ஜார்னிஆஃப் எ சிவிலைசேஷன்: இண்டஸ் டுவைகை’ (சிந்து சமவெளி முதல் வைகைவரை) என்ற ஆங்கில புத்தகத்தை சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்தார்.

ஸ்டாலின் முதல்வரான பிறகு நடைபெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் சோனியா, ராகுலுடன் நடப்பு அரசியல் நிலவரம், தமிழகத்தில் கரோனாவால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து ஸ்டாலின் விவாதித்ததாக திமுகவினர் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நானும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக மக்களுக்கு ஒரு வலுவான, வளமான அரசை கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்திஆகியோரை சந்தித்துப் பேசினோம். கருணாநிதி காலந்தொட்டே தொடரும் உறவு இது. நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. உறுப்பினர் மறைவு மற்றும் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இடைக்கால பதவியிடம் என்பதால் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டால் 3 இடங்களிலும் திமுக வெற்றிபெறும். இந்த 3 இடங்களில் காங்கிரஸ் ஓரிடத்தை கேட்டு வருகிறது. இது தொடர்பாகவும் சோனியா - ஸ்டாலின் சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை திரும்பினார்

டெல்லி சாணக்யபுரியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் புதிய தமிழ்நாடு இல்லத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர்கள் ஜக்மோகன்சிங் ராஜூ, ஆசிஷ் சாட்டர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது 2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் நேற்று மாலை சென்னை திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x