Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

கரோனா சிகிச்சைக்கு உதவ 26 மாநிலங்களில் 111 மையங்கள் - முன்களப்பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவி வரும் முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சியைப் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், 3-வது அலை ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து 3-வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், மக்களை பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கரோனா தொற்றுக்கான சிகிச்சைக்கு உதவி வரும் முன்களப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.

திறன் மேம்பாட்டு இந்தியா (ஸ்கில் இந்தியா) திட்டத்தின் கீழ், மருத்துவம் சாராத சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 26 மாநிலங்களில் இதற்காக 111 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளிலேயே கரோனா தொற்றுக் கான சிகிச்சைக்கு உதவி செய்வது, அடிப்படை பராமரிப்பு உதவி, மேம்பட்ட முறையில் பராமரிப்பு, அவசரகால உதவி, கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை பொதுமக்களிடம் சேகரிப்பதற்கான வழிமுறைகள், மருத்துவ உபகரணங்களை கையாளும் முறை ஆகிய 6 வகை பயிற்சிகள் இதில் அடங்கும்.

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களின் திறன்கள் மேம்படும். ரூ.276 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது மோடி பேசியதாவது:

கரோனா வைரஸ் இன்னும் இருக்கிறது. அது தன்னை உருமாற்றிக் கொண்டு மீண்டும் வரலாம். கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலையில் ஏற்பட்ட சவால்கள் என்னென்ன என்பதை நாம் அறிவோம். எனவே, அடுத்த அலையை எதிர்கொள்வதற்கு நாடு முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும். அதற்காக 1,500 ஆக்சிஜன் ஆலைகளை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பொறுத்த வரையில் நாட்டு மக்களுக்கு இலவசமாக அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

இந்தப் பயிற்சியின் மூலம் மருத்துவர்கள் அல்லாத முன்களப் பணியாளர்களின் திறன்கள் மேம்பட்டு, தற்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சிறந்த உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், ‘திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x