Published : 19 Jun 2021 03:12 am

Updated : 19 Jun 2021 03:12 am

 

Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் 6 வாரத்தில் அறிக்கை தர உத்தரவு :

சென்னை

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கின் புலன் விசாரணையை 6 வாரங்களில் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சிறப்பு டிஜிபிக்கு எதிராக, உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தினார்.


நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கூறியதாவது:

இந்த விவகாரம் தொடர்பாககடந்த ஏப்ரலுக்கு பிறகு 2 அதிகாரிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 5 அதிகாரிகள், 2 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 113சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் தாமதமான தடயவியல் அறிக்கை 3 வாரங்களில் கிடைத்துவிடும். அதன்பிறகு புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல்செய்ய அவகாசம் தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘பெண் அதிகாரியை பாலியல்ரீதியாக துன்புறுத்தியது தொடர்பான புகாரை விசாரித்த விசாகா குழு, ஏற்கெனவே தனது அறிக்கையை உள்துறை செயலரிடம் சமர்ப்பித்து விட்டது. அதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

இதையடுத்து, சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை 6 வாரத்துக்குள் முடித்து,சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 30-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x