Last Updated : 19 Jun, 2021 03:15 AM

 

Published : 19 Jun 2021 03:15 AM
Last Updated : 19 Jun 2021 03:15 AM

தஞ்சாவூரின் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள - 10 அடி உயர பிரம்மாண்ட தலையாட்டி பொம்மைகள் : அசத்தும் சுவாமிமலை சிற்பக் கலைஞர்

தலையாட்டி பொம்மை தஞ்சாவூ ரின் பெருமைகளில் ஒன்று. தஞ்சை மண்ணின் மகத்துவத்துக்கு ஏற்ற வகையில், இந்த பொம்மை இங்கு மட்டுமே தயாரிக்கப்பட்டு வரு வதால், இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டு உலக அளவில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

வீடுகள், நிறுவனங்களின் வரவேற்பு அறைகளை மட்டும் அலங்கரித்துக் கொண்டிருந்த அரைஅடி உயரம் கொண்ட தலையாட்டி பொம்மைகளை 10 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமாக வடிவமைத்து அசத்தி வருகிறார் சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் துரை.ராஜாபீர்பால். இந்த பிரம்மாண்ட தலையாட்டி பொம்மைகளை தஞ்சாவூருக்கு வருவோரை வரவேற்கும் விதமாக முக்கிய சாலைகளில் வைத்து சிறப்பு செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

இதுகுறித்து சிற்பக் கலைஞர் துரை.ராஜாபீர்பால் கூறியது: கும்பகோணம் மகாமகத் திருவிழாவின்போது, அரசலாற்றின் பாலத்தின் இருபுறமும் யானை பொம்மைகளை வடிவமைத்து நிறுவினேன். அதேபோல, தஞ்சாவூர் அரண்மனை முகப்பு, தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திலும் நான் வடிவமைத்த யானை பொம்மைகள் நிறுவப்பட்டுள்ளன.

தஞ்சாவூரின் தனித்தன்மையாக விளங்கும் தலையாட்டி பொம்மை கள் பலரது வீட்டுக்குள் தான் இருக்கின்றன. இதன் பாரம்பரியம், கைவினையின் நேர்த்தியை பொதுமக்கள் அனைவரின் பார்வையில்படும்படி பெரிய அளவில் பொது இடங்களில் ஏன் வைக்க கூடாது என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இதை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ம.கோவிந்தராவிடம் கூறியபோது, முதலில் ஒரு பொம்மையை வடிவமைத்து தரும்படி கேட்டுக் கொண்டார்.

உடனடியாக ஒருமாத காலத்தில் 10 அடி உயரத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை வடிவமைத்து கொடுத்தேன். இதை பார்த்து ஆட்சியர் ம.கோவிந்தராவ் நன்றாக இருக்கிறது எனக் கூறியதால், மேலும் 10 தலையாட்டி பொம்மைகளை செய்து கொடுத்துள்ளேன். இவை மாவட்டத்தின் வரவேற்பு எல்லைகள், தஞ்சாவூர் நகரில் உள்ள முக்கிய சாலைகள், ரவுண்டானாக்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதைப் பார்த்த பல்வேறு தனியார் நிறுவனங்களும், இதேபோன்று தங்களது நிறுவனத்தில் வாயில் முன் வைக்க விரும்பி அதற்கான ஆர்டரையும் எனக்கு கொடுத்து வருகின்றன.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையில் ராஜா, ராணி என 2 வகை உள்ளது. இவை மழை, வெயில் அடித்தாலும், வர்ணம் மாறாமல் இருக்கும் வகையில், பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மற்றும் ஃபைபரால் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

கரோனா குறித்த விழிப்பு ணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ரவுண்டா னாக்களில் உள்ள பிரம்மாண்ட தலையாட்டி பொம்மைகளில் ‘நோ மாஸ்க், நோ என்ட்ரி’ என்ற வாசகத்தை அணிவித்து கரோனா குறித்த விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x