Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக - ரூ.61 கோடியில் சிறப்பு தொகுப்பு திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி டெல்டா மாவட்ட குறுவைநெல் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு நெல் விதைகள், உரங்கள், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்கவும், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும் ரூ.61.09 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் உத்தரவின்படி, சிறப்பு கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்துபல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை கலந்துபேசி, ரூ.65.11 கோடியில் 4,061.44 கி.மீ. தூரத்துக்குதூர்வாரும் விதமாக 647 பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

திருச்சி கல்லணையில் நடந்து வரும் ரூ.1,036 கோடியிலான சீரமைப்பு பணிகளை கடந்த 11-ம் தேதிஆய்வு செய்த முதல்வர், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை 12-ம் தேதி திறந்து வைத்தார். காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் கடந்த 16-ம்தேதி நிலவரப்படி 94.26 அடி (57.656டிஎம்சி) நீர் இருப்பில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்ந்து காவிரியில் மாதம்தோறும் உரியஅளவில் தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அறிவுரை வழங்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 22-ம்தேதி நடக்க உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்பு குறுவைப் பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்கு தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவு இருப்பில் வைக்கவும், நெல் நடவு இயந்திரங்கள் மூலம் விரைவாக நடவு மேற்கொள்ளவும் வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இத்தகைய முன்னேற்பாடுகளால், ஜூன் 14-ம் தேதி வரை 1 லட்சத்து 69,300 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவைப் பருவத்தில் அதிக மகசூல்எடுக்க வேண்டும் என்பதற்காக, 2,870 டன் சான்று நெல் விதைகள், 1.90 லட்சம் ஏக்கர் பரப்பில் முழுமானியத்தில் ரசாயன உரங்கள், 24 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பசுந்தாள்உர விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும். இதற்காக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்களை வழங்கவும், நீரை திறம்பட சேமித்து பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தும் வகையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கவும் ரூ.11.09 கோடி நிதி என ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவைசிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரத்து259 விவசாயிகள் பயனடைவர்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் இத் திட்டம்செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் நடப்பு ஆண்டில், குறுவை நெல் சாகுபடி இலக்கான 3.50 லட்சம்ஏக்கர் பரப்பளவைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x