Published : 18 Jun 2021 03:13 am

Updated : 18 Jun 2021 03:13 am

 

Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு குறித்து - உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ அறிக்கை தாக்கல் : ஜூலை 31-ல் முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்

புதுடெல்லி

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு குறித்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 31-ம்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கரோனா 2-வது அலையின் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்தது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.


இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு குறித்து சிபிஎஸ்இ மற்றும் இந்திய பள்ளிகளுக்கான தேர்வுகள் துறை கவுன்சில் சார்பில்(சிஐஎஸ்சிஇ) மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புதேர்வுகளில் இருந்து இந்த ஆண்டுக்கான 12-ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாணவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்றுள்ள 3 பாடங்களில் இருந்து 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களும், 12-ம்வகுப்பில் இதுவரை நடத்தப்பட்டுள்ள பருவத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு மற்றும் செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40 சதவீதம் கணக்கிடப்பட்டு, இறுதி மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

இவ்வாறு கணக்கிடப்படும் மதி்ப்பெண்களைப் பார்வையிட ஒவ்வொரு பள்ளியிலும் 2 மூத்த ஆசிரியர்களைக் கொண்ட நடுநிலைக் குழு அமைக்கப்படும். தேவைப்பட்டால் 3-வது நபரும் இக்குழுவில் இணைக்கப்படுவார்.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் முறையே 30:30:40 என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும். இந்த மதிப்பெண்கள் தங்களுக்கு திருப்திகரமாக இல்லை எனக் கருதும் மாணவர்களுக்கு கரோனா பரவல் தணிந்த பிறகு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் முறையே 30:30:40 என்ற விகிதத்தில் கணக்கிடப்படும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x