Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்க நாளை முதல் - 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் : அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் திட்டம் குறித்தான செய்தியாளர் சந்திப்பு மின்வாரிய துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, கண்காணிப்பு துறை டிஜிபி ரவி ஆகியோர் உடனிருந்தனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்க, அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை நாளை தொடங்கி 10 நாட்களுக்குள் விரைந்து செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்குவதற்கும் ஏற்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சமீபகாலமாக, ஆங்காங்கே மின்தடை ஏற்படுவதாக மின்வாரியத்துக்கு புகார்கள் வருகின்றன. கடந்த ஆட்சியில் 2020 செப்டம்பர் மாதம் முதல் கடந்த 9 மாதங்களாக எவ்வித மின் பராமரிப்பு பணியும் நடக்கவில்லை. அதற்கு தேவையான உதிரிபாகங்கள், மின் பொருட்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. 9 மாதங்களாக பராமரிப்பு பணி நடக்காததால், சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அதை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் ஜூன் 19-ம் தேதி (நாளை) முதல் 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் முறையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படும்.

தமிழகம் முழுவதும் 83,553 இடங்களில் மரக் கிளைகள் அகற்றப்பட வேண்டி உள்ளது. பழுதடைந்துள்ள 36,737 மின்கம்பங்கள் மாற்றப்படும். சாய்ந்த நிலையில் உள்ள 25,260 மின்கம்பங்கள் சரிசெய்யப்படும். 29,995 இடங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், 32,164 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் சரிசெய்யப்பட உள்ளன. பழுதடைந்த 1,023 மின்பெட்டிகள், பலவீனமான நிலையில் உள்ள 33,356 பீங்கான் இன்சுலேட்டர்கள் சரிசெய்யப்படும் 1,030 துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றை சரிசெய்தால்தான், தடையில்லா மின்சாரம் வழங்க முடியும்.

இந்த பணிகளை முழுமையாக நிறைவேற்ற 6 மாதங்கள் ஆகும். இதற்கிடையே, எதிர்பாராத மின்தடங்கல் ஏற்படாமல் இருக்க, ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு திட்டம் மூலம் பகுதிவாரியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தினமும் சுமார் 2 முதல் 3 மணி நேர அவகாசத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, அத்தியாவசியப் பணிகள் 10 நாட்களுக்குள் விரைந்து செய்து முடிக்கப்பட உள்ளது. இதற்கான தளவாடப் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

கூடுதல் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக 10 லட்சத்து 3 ஆயிரத்து 777 பேர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். உரிய முறையில் மின் பயனீட்டு கட்டணம் கணக்கீடு செய்யாதவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் கட்டணத்தை மக்கள் ஓரிரு நாட்கள் தாமதமாக செலுத்தினாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.

தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1.33 லட்சம் கோடி கடன் உள்ளது. தமிழகம் மின்மிகை மாநிலம் இல்லை. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால்தான் மின்மிகை மாநிலம் என்று கூறமுடியும். கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று கூறினார்கள். ஆனால், விவசாயத்துக்காக மின் இணைப்பு கோரி காத்திருந்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. இதுபோன்ற அனைத்து விவரங்களும் சட்டப்பேரவை கூட்டத்தில் விரிவாக தெரிவிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x