Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

மழைமலை மாதா தேவாலயத்துக்கு சொந்தமான இடங்கள் அளவெடுப்பு :

மதுராந்தகம்

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற மழைமலை மாதா தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்கு திருவிழா காலங்களில் செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவர். பிரசித்தி பெற்ற இந்த தேவாலயம் அமைந்துள்ள இடம் ஆக்கிரமிப்பு இடம் என்று பல்வேறு இந்து அமைப்புகளும் புகார் கூறி வருகின்றன.

இது தொடர்பாக இந்து முன்னணி, கோயில் மீட்பு பாதுகாப்பு குழு, சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அந்த தேவாலயம் அமைந்துள்ள இடங்கள் நேற்று முன்தினம் அளவீடு செய்யப்பட்டன.

வருவாய் துறையினர், நிள அளவை பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் தேவாலயம் அமைந்துள்ள இடங்களை அளந்தனர். இந்த பணியையொட்டி டிஎஸ்பி பிராங்கிளின் ரூபன், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அப்போது அங்கிருந்த பலர், தேவாலய வளாகத்துக்குள் மயில் மற்றும் மான்கள் இருப்பதாகவும், அவற்றை திறந்து வெளியே விட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், வருவாய் துறையினர் 'நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளப்பது மட்டுமே தங்கள் பணி' என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நில அளவைப் பணிகள் நடைபெற்றன. பாதி நடைபெற்ற நிலையில் அளவீட்டுப் பணிகள் தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பி மனுதாரர்கள் தரப்பில் வாக்கு வாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து நில அளவீட்டுப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறும்போது, "மழைமலை மாதா திருக்கோயில் நிலங்கள் பாதி அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தெளிவான வரைடங்களை கொண்டு வந்து அளக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x