Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

அரசு கேபிள் டிவி இணைப்பை பயன்படுத்தாதவர்கள் - செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் : அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்

சென்னை

தமிழக அரசு கேபிள் டிவி இணைப்பை பயன்படுத்தாதவர்கள், நிறுவனம் வழங்கிய செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், கட்டணமின்றி, இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு ரூ.140 மற்றும் ஜிஎஸ்டி என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களைவிட மிக குறைந்த கட்டணமாகும். தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டுப் பெறலாம். அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுது அடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, சந்தாதாரர் குடிபெயர்ந்து வேறு இடத்துக்கு சென்றாலோ, தனியார் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தினாலோ, இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ், ரிமோட் அடாப்டர் ஆகியவற்றை அந்த பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதை அவர்கள் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

ஒரு சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்டு, அதை பொதுமக்களுக்கு வழங்காமல், தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வழங்கி அரசு நிர்ணயம் செய்த தொகையைவிட கூடுதலாக வசூல் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். செட்டாப் பாக்ஸ்களை 3 மாதங்களுக்கு மேலாக செயல்படுத்தாமல் இருந்தால், அவற்றை திரும்ப ஒப்படைக்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x